கர்நாடகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு: 15 லட்சம் பேர் புறக்கணிப்பு என தகவல்

கர்நாடகத்தில் மொத்தம் 6.80 கோடி மக்கள் உள்ளனர்.
பெங்களூரு,
கர்நாடகத்தில் கடந்த மாதம் (செப்டம்பர்) 22-ந்தேதி முதல் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருகிறது. முதலில் இந்த பணி அக்டோபர் 18-ந்தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்பிறகு இந்த பணி வருகிற 31-ந்தேதி வரை மேற்கொள்ளப்படும் என கர்நாடக அரசு அறிவித்தது.
அதன்படி கணக்கெடுப்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணி பெரும்பாலான மாவட்டங்களில் முடிந்துவிட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. பெங்களூருவில் தாமதமாக தான் இந்த பணி தொடங்கியது. இதனால் பெங்களூருவில் சாதிவாரி கணக்கெடுப்பு பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் சாதிவாரி கணக்கெடுப்பை 15 லட்சம் பேர் புறக்கணித்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதாவது கர்நாடகத்தில் மொத்தம் 6.80 கோடி மக்கள் உள்ளனர். இதில் இதுவரை 6.10 கோடி பேர் இந்த கணக்கெடுப்பில் தகவல் அளித்துள்ளனர். மீதமுள்ளவர்களிடம் கணக்கெடுப்பு பணி நடந்து வருகிறது.இதே வேளையில் இதுவரை 15 லட்சம் பேர் இந்த கணக்கெடுப்புக்கு தகவல் வழங்காமல் புறக்கணித்த பரபரப்பு தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
பெங்களூருவை பொறுத்தவரை மாநகர எல்லையில் 39 லட்சம் வீடுகள் உள்ளன. இதுவரை 19 லட்சம் வீடுகளில் மட்டுமே கணக்கெடுப்பு பணி நடைபெற்றுள்ளது. 5 லட்சம் வீடுகளில் வசிப்போர் தங்களது கணக்கெடுப்பு விவரங்களை வழங்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. தட்சிணகன்னடா, உத்தரகன்னடா மாவட்டங்களில் தலா 50 ஆயிரம் பேர் தகவல்களை வழங்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. பல வீடுகள் பல நாட்களாக பூட்டியே கிடப்பதாகவும், இதனால் கணக்கெடுப்பு நடத்த முடியவில்லை. ஒட்டு மொத்த மக்கள் தொகையில் பெங்களூருவில் 20 சதவீதம் மக்கள் உள்ளனர் என்றும் மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத் தலைவர் தயானந்த் கூறினார்.






