விஜய்யிடம் நடத்தப்படும் விசாரணையை எழுத்துப்பூர்வமாகவும் வாங்கும் சிபிஐ அதிகாரிகள்

டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் தவெக தலைவர் விஜய் ஆஜராகியுள்ளார்.
புதுடெல்லி,
த.வெ.க. தலைவர் விஜய் கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ந்தேதி அன்று கரூரில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியானார்கள். இந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கை சுப்ரீம் கோர்ட்டு மேற்பார்வையில் சிபிஐ விசாரித்து வருகிறது. கரூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள அரசு சுற்றுலா மாளிகையில் சி.பி.ஐ. அதிகாரிகள் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அங்கு வைத்து புஸ்சி ஆனந்த், நிர்மல்குமார், ஆதவ் அர்ஜூனா, மதியழகன் உள்ளிட்ட நிர்வாகிகளிடம் கடந்த நவம்பர் மாதம் விசாரணை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து அவர்களுக்கு சம்மன் அனுப்பி டெல்லியில் உள்ள சி.பி.ஐ. தலைமை அலுவலகத்திலும் கடந்த மாதம் 3 நாட்கள் விசாரணை நடத்தப்பட்டது.
விசாரணையின் தொடர்ச்சியாக த.வெ.க. தலைவர் விஜயையும் நேரில் அழைத்து விசாரிக்க சி.பி.ஐ. முடிவு செய்து அவருக்கு சம்மன் அனுப்பியது. இன்று டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் காலை 11 மணிக்கு அவர் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், இந்த சம்மனை ஏற்று டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் தவெக தலைவர் விஜய் இன்று ஆஜரானார். அவரிடம் கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக பல்வேறு கேள்விகள் கேட்கப்படுகிறது. விஜய்யிடம் 100 கேள்விகளைக் கேட்க சிபிஐ திட்டமிட்டுள்ளது. 11.30 மணியளவில் ஆஜரான விஜய்யிடம் மாலை 5 வரை விசாரணை நடத்தப்பட உள்ளது. விஜய்யிடம் கேட்கப்படும் கேள்விகள், அவர் அளிக்கும் பதில்களை சிபிஐ அதிகாரிகள் எழுத்துப்பூர்வமாக பதிவு செய்து வருகின்றனர்.






