முதல்-மந்திரி பதவி விவகாரம்: டி.கே.சிவக்குமாருக்கு ஆதரவாக டெல்லியில் முகாமிட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் - கர்நாடக அரசியலில் பரபரப்பு


முதல்-மந்திரி பதவி விவகாரம்: டி.கே.சிவக்குமாருக்கு ஆதரவாக டெல்லியில் முகாமிட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் - கர்நாடக அரசியலில் பரபரப்பு
x
தினத்தந்தி 24 Nov 2025 12:45 PM IST (Updated: 24 Nov 2025 6:08 PM IST)
t-max-icont-min-icon

டி.கே.சிவக்குமாருக்கு முதல்-மந்திரி பதவி வழங்க வேண்டும் என காங்கிரஸ் தலைமையிடம் கோரிக்கை வைப்பதற்காக எம்.எல்.ஏ.க்கள் டெல்லி சென்றுள்ளனர்.

பெங்களூரு,

கர்நாடக மாநிலத்தில் முதல்-மந்திரி சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அதே சமயம், துணை முதல்-மந்திரியாக டி.கே.சிவக்குமார் பதவி வகித்து வருகிறார். இந்த சூழலில், சித்தராமையாவை மாற்றம் செய்துவிட்டு, டி.கே.சிவக்குமாருக்கு முதல்-மந்திரி பதவி வழங்க வேண்டும் என மாநில காங்கிரஸ் கட்சிக்குள் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.

இந்த விவகாரம் கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து காங்கிரசில் எம்.எல்.ஏ.க்களின் ஆதரவை பெற சித்தராமையா, டி.கே.சிவக்குமார் முயற்சி செய்து வருகிறார்கள். துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமாருக்கு முதல்-மந்திரி பதவி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் டெல்லியில் முகாமிட்டு வருகின்றனர்.

முன்னதாக கடந்த வாரம் டி.கே.சிவக்குமாருக்கு ஆதரவாக 10-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள் டெல்லி சென்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை சந்தித்து பேசினர். இந்நிலையில் தற்போது மேலும் 6 எம்.எல்.ஏ.க்கள் டி.கே.சிவக்குமாருக்கு முதல்-மந்திரி பதவி வழங்க வேண்டும் என காங்கிரஸ் தலைமையிடம் கோரிக்கை வைப்பதற்காக டெல்லிக்கு சென்றுள்ளனர்.

இந்த விவகாரத்தை காங்கிரஸ் மேலிடம் மென்மையாக கையாண்டு வருகிறது. கடந்த 2023-ம் ஆண்டு கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தபோது முதல்-மந்திரி பதவியை ஆட்சிக்காலத்தில் பகிர்ந்து கொள்ள முடிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அதன்படி, தற்போது சித்தராமையா முதல்-மந்திரியாக பதவியேற்று இரண்டரை ஆண்டுகள் முடிந்துவிட்ட நிலையில், டி.கே.சிவக்குமாருக்கு முதல்-மந்திரி பதவி வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story