சீன வெளியுறவுத்துறை மந்திரி இன்று இந்தியா வருகை

எல்லை விவகாரங்கள் தொடர்பான 24-வது சுற்று பேச்சுவார்த்தையில் சீன மந்திரி வாங் யி பங்கேற்க உள்ளார்.
புதுடெல்லி,
கால்வான் பகுதியில் கடந்த 2020-ம் ஆண்டு ஏற்பட்ட மோதலில் இந்திய ராணுவத்தினர் 20 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து இரு நாடுகளின் உறவு முன் எப்போதும் இல்லாத வகையில் பாதிக்கப்பட்டது. இதன் எதிரொலியாக இந்தியா-சீனா இடையேயான எல்லை வழி வர்த்தகம் நிறுத்தப்பட்டது.
இதற்கிடையில் உத்தரகாண்ட், இமாசல பிரதேசம் மற்றும் சிக்கிம் எல்லை வழியாக வர்த்தகத்தை மீண்டும் தொடங்க சீன தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது. இருப்பினும் அரிய வகை தனிமங்கள் மற்றும் உரங்களின் விநியோகத்தை சீனா இதுவரை மீண்டும் தொடங்கவில்லை.
அமெரிக்க அதிபரின் வரிவிதிப்பு நடவடிக்கைகள், தேசிய பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களை மேற்கோள் காட்டி ஜின்பிங் தலைமையிலான சீன அரசு அரிய வகை தனிமங்களின் ஏற்றுமதிக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதனால் போக்குவரத்து உபகரணங்கள் முதல் மின்னணுவியல் உற்பத்தி துறைக்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், எல்லை விவகாரங்கள் தொடர்பான 24-வது சுற்று பேச்சுவார்த்தையில் பங்கேற்கும் விதமாக சீன வெளியுறவுத்துறை மந்திரி வாங் யி, இன்று(திங்கட்கிழமை) இந்தியாவிற்கு வருகிறார். இந்த சிறப்பு பிரதிநிதிகள் பேச்சுவார்த்தையில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் பங்கேற்கிறார். இரு நாடுகளும் வர்த்தக ஒத்துழைப்புக்கான வாய்ப்புகளை ஆராயவும், பதற்றத்தை தணிக்கவும் முயன்று வரும் சூழலில், சீன வெளியுறவுத்துறை மந்திரி இந்தியாவிற்கு வருகை தருவது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பயணமாக பார்க்கப்படுகிறது.






