தமிழகம் உள்பட சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களுக்கான முன்னாய்வு குழு: காங்கிரஸ் நியமனம்

தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி தி.மு.க.வுடன் கூட்டணி பேச்சு நடத்த காங்கிரஸ் குழு அமைத்திருந்தது.
சென்னை,
தமிழகத்தில் இந்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இதையொட்டி அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை உள்ளிட்ட தேர்தல் பணிகளை முடுக்கி விட்டுள்ளன. காங்கிரஸ் கட்சி, நடிகர் விஜயின் தவெக உடன் கூட்டணி பற்றி பேச இருப்பதாக, அவ்வப்போது தகவல்கள் பரவி வந்தன. இதேபோல பீகார் தேர்தலில் ஏற்பட்ட படுதோல்வி காரணமாக காங்கிரஸ் கட்சி, தி.மு.க. கூட்டணியிலிருந்து விலகுகிறது என்றும் பேசப்பட்டது. இந்த விவகாரம் தமிழக அரசியல் கட்சியினர் மத்தியில் பெரும் பரபரப்பானது.
இத்தகைய சூழ்நிலையில், தி.மு.க.வுடன் கூட்டணி பேச்சு நடத்த அகில இந்திய காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர்கள் சூரஜ் ஹெக்டே, நிவேதித் அல்வா, சட்டமன்ற காங்கிரஸ் கட்சித்தலைவர் செ.ராஜேஷ்குமார் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.
இந்நிலையில் தமிழகம் உள்ளிட்ட சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களுக்கான முன்னாய்வு குழுவை காங்கிரஸ் கட்சி நியமனம் செய்துள்ளது. இதன்படி காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி வத்ரா, அசாம் காங்கிரஸ் முன்னாய்வு குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் காங்கிரஸ் தலைவர்கள் பி.கே. ஹரிபிரசாத், மதுசூதன் மிஸ்திரி மற்றும் டி.எஸ். சிங் தியோ ஆகியோர் முறையே மேற்கு வங்காளம், கேரளா மற்றும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி காங்கிரஸ் முன்னாய்வு குழுக்களின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளனர்.






