காங்கிரசின் வாக்காளர் அதிகார யாத்திரை தொடங்கியது

வாக்கு திருட்டுக்கு முற்றுப்புள்ளி வைத்து, எஸ்.ஐ.ஆரின் உண்மையை அம்பலப்படுத்துவோம் என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.
பாட்னா,
பா.ஜனதாவுடன் சேர்ந்து தேர்தல் கமிஷன் வாக்கு திருட்டில் ஈடுபடுவதாக காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித்தலைவருமான ராகுல் காந்தி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார்.
குறிப்பாக கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பல ெதாகுதிகளில் முறைகேடு நடந்ததாக கூறிய அவர், பெங்களூரு மத்திய தொகுதியில் நடந்த முறைகேடு குறித்த தரவுகளையும் வெளியிட்டு இருந்தார். இதற்கிடையே சட்டசபை தேர்தலை எதிர்ேநாக்கி வரும் பீகாரில் தேர்தல் கமிஷன் மேற்கொண்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மூலம் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டு உள்ளனர்.
இதற்கு எதிராக ராகுல் காந்தி தீவிர போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். அதன் ஒரு பகுதியாக பீகாரில் யாத்திரை செல்ல திட்டமிட்டு இருந்தார். ‘வாக்காளர் உரிமை யாத்திரை’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த யாத்திரை பீகாரின் சசாரம் என்ற இடத்தில் காங்கிரசின் வாக்காளர் அதிகார யாத்திரை தொடங்கியது. யாத்திரையில், மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ஆர்ஜேடி தலைவர்கள் லாலு பிரசாத் யாதவ், தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
முன்னதாக யாத்திரை தொடங்குமுன் ராகுல்காந்தி பேசியதாது:-
பிரதமர் மோடி உண்மையான சாதி கணக்கெடுப்பை நடத்தப் போவதில்லை என்பது எனக்குத் தெரியும்.ஆனால் இந்திய கூட்டணி நாட்டில் உண்மையான சாதி கணக்கெடுப்பை உறுதி செய்யும். வாக்கு திருட்டுக்கு முற்றுப்புள்ளி வைத்து, எஸ்.ஐ.ஆரின் உண்மையை அம்பலப்படுத்துவோம். லாலு ஜி, டாக்டர் பொதுக்கூட்டங்களுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தியிருந்தாலும் இங்கு வந்ததற்கு எனது மனமார்ந்த நன்றி.
தேர்தல் ஆணையம் என்ன செய்கிறது என்பதை முழு நாடும் அறிந்திருக்கிறது. முன்னதாக, வாக்குகள் எவ்வாறு திருடப்படுகின்றன என்பதை நாடு அறிந்திருக்கவில்லை. ஆனால் வாக்குகள் எவ்வாறு திருடப்படுகின்றன என்பதை நாங்கள் பத்திரிகையாளர் சந்திப்பில் தெளிவுபடுத்தினோம் என்றார்.
மாநிலம் முழுவதும் 16 நாட்களாக 1,300 கி.மீ. தூரம் நடைபெறும் இந்த யாத்திரை அடுத்த மாதம் (செப்டம்பர்) 1-ந்தேதி தலைநகர் பாட்னாவில் பிரமாண்ட பொதுக்கூட்டத்துடன் நிறைவடைகிறது.






