டெல்லி கார் குண்டுவெடிப்பு வழக்கு; அமீர் அலிக்கு 10 நாள் என்.ஐ.ஏ. காவல்

உள்படம்: உமர்
டெல்லி கார் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக, டெல்லி பாட்டியாலா கோர்ட்டில் அலி இன்று ஆஜர்படுத்தப்பட்டார்.
புதுடெல்லி,
டெல்லியின் முக்கிய பகுதியான செங்கோட்டை அருகே கடந்த 10-ந்தேதி மாலை 6.52 மணியளவில் கார் வெடித்து சிதறிய சம்பவத்தில் 13 பேர் பலியானார்கள். 27 பேர் காயம் அடைந்தனர். இது திட்டமிட்ட பயங்கரவாத செயல் என கண்டறியப்பட்டு உள்ளது. நாட்டையே உலுக்கிய இந்த சம்பவம் குறித்து தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ.) மற்றும் தேசிய பாதுகாப்பு படையினர் விசாரித்து வருகின்றனர்.
இந்த தாக்குதலை நிகழ்த்தியது டாக்டர் உமர் முகமது என்ற பயங்கரவாதி என கண்டறியப்பட்டது. உமர் உடல் சிதறி இறந்தது டி.என்.ஏ. பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து காஷ்மீர், அரியானா, உத்தர பிரதேசம் என பல்வேறு மாநிலங்களிலும் டாக்டர்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
இந்த சம்பவத்தில், காஷ்மீர் டாக்டர் முசாமில், அரியானா மாநிலம் பரிதாபாத்தில் சமீபத்தில் கைது செய்யப்பட்டார். பெண் டாக்டர் ஷாகீன், லக்னோவில் கைது செய்யப்பட்டார். அரியானா மாநிலம் மேவாட்டை சேர்ந்த மவுலவி இஷ்தியாக் என்பவரும் கைது செய்யப்பட்டு உள்ளார். கார் வெடிப்பு சம்பவம் எதிரொலியாக, அல்-பலா பல்கலைக்கழகத்தின் உறுப்பினர் அங்கீகாரத்திற்கு இந்திய பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பு தற்காலிக தடை விதித்து உத்தரவிட்டு உள்ளது.
இதன் தொடர்ச்சியாக, பஞ்சாப்பின் பதன்கோட் நகரில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில் கடந்த 2 ஆண்டுகளாக வேலை பார்த்து வரும் 45 வயது மதிக்கத்தக்க அறுவை சிகிச்சை டாக்டர் ஒருவரை விசாரணை அமைப்புகள் சமீபத்தில் கைது செய்தன.
அவர் இதற்கு முன்பு, அரியானாவின் பரீதாபாத்தில் உள்ள அல்-பலா பல்கலைக்கழகத்தில் வேலை செய்துள்ளார். இந்த வழக்கில் அரியானாவின் நூ மாவட்டத்தில் 2 டாக்டர்களை விசாரணைக்காக போலீசார் அதற்கு முந்தின நாளன்று கைது செய்திருந்தனர். அவர்களில் ஒருவர் அல்-பலா பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர். மற்றொருவர் இந்த பல்கலைக்கழகத்தில் பயிற்சி டாக்டராக இருந்துள்ளார்.
இந்த நிலையில், உமருக்கு உதவியாக செயல்பட்ட அமீர் ரஷீத் அலி என்பவரை என்.ஐ.ஏ. அமைப்பு நேற்று கைது செய்தது. இவர் உமருடன் சேர்ந்து சதி திட்டம் தீட்டியவர் ஆவார். காஷ்மீரை சேர்ந்த அலியின் பெயரிலேயே கார் பதிவு செய்யப்பட்டு உள்ளது. உமரின் மற்றொரு வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கிறது. டெல்லி சம்பவம் தற்கொலைப்படை தாக்குதல் என்றும் என்.ஐ.ஏ. தெரிவித்து உள்ளது. இந்த நிலையில், டெல்லி பாட்டியாலா கோர்ட்டில் அலி இன்று ஆஜர்படுத்தப்பட்டார். அவருக்கு 10 நாள் என்.ஐ.ஏ. காவல் விதித்து கோர்ட்டு தீர்ப்பளித்து உள்ளது. இந்த வழக்கில், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டு உள்ளது.






