டெல்லி கார் வெடிப்பு வழக்கு: மேலும் 4 பேருக்கு என்.ஐ.ஏ. காவல்


டெல்லி கார் வெடிப்பு வழக்கு: மேலும் 4 பேருக்கு என்.ஐ.ஏ. காவல்
x
தினத்தந்தி 21 Nov 2025 3:45 AM IST (Updated: 21 Nov 2025 3:45 AM IST)
t-max-icont-min-icon

டெல்லியில் கடந்த 10-ந்தேதி நடந்த கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் 15 பேர் கொல்லப்பட்டனர். இந்த வழக்கை என்.ஐ.ஏ. விசாரித்து வருகிறது.

புதுடெல்லி,

இந்த சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட கார் ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த அமீர் ரஷீத் அலி என்பவர் பெயரில் இருந்தது. அவர்தான் காரை வாங்கி உமர் முகமதுவுக்கு கொடுத்துள்ளார். இதனால் அமீர் ரஷீத் அலியை அதிகாரிகள் கைது செய்தனர்.

இதுபோல, சம்பவத்தில் தற்கொலை குண்டாக செயல்பட முதலில் ஜாசிர் பிலால்வானி என்பவர்தான் ஆயத்தமாக்கப்பட்டார். ஆனால் இடையில் அவர் பின்வாங்கினார். இவர் உமர் முகமதுவின் நண்பராக இருந்தார். இவரையும் புலனாய்வு அதிகாரிகள் கைது செய்தனர். பின்னர் இவர்கள் 2 பேரும் கோர்ட்டில் தனித்தனியாக ஆஜர்படுத்தப்பட்டு காவல் விசாரணைக்கு எடுக்கப்பட்டனர்.

இதற்கிடையே உமர் முகமதுவுடன் சேர்ந்து அல்பலா பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய டாக்டர்கள் முசாமில் ஷகீல், ஷாகீன் சயித், அங்கு தங்கியிருந்த முப்தி இர்பான் அகமது மற்றும் டாக்டர் அதீல் அகமது ராதர் ஆகியோரும் பிடிபட்டு இருந்தனர். இவர்களை நேற்று என்.ஐ.ஏ. அதிகாரிகள் முறையாக கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவர்களை 10 நாள் என்.ஐ.ஏ. காவலில் வைத்து விசாரிக்க கோர்ட்டு உத்தரவிட்டது.

இவர்களோடு சேர்த்து என்.ஐ.ஏ. அதிகாரிகளால் 6 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இதற்கிடையே அல்பலா பல்கலைக்கழக பண மோசடி தொடர்பாக அமலாக்க விசாரணையும் தனியாக நடந்து கொண்டிருக்கிறது. அந்த பல்கலைக்கழகத்தின் தலைவர் ஜாவேத் அகமது சித்திக் கைது செய்யப்பட்டு 13 நாள் விசாரணைக்கு எடுக்கப்பட்டு இருக்கிறார்.

1 More update

Next Story