2027-ம் ஆண்டுக்குள் 3-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுக்கும் - அமித்ஷா

காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் உத்தரகாண்டுக்கு அளித்த நிதியை விட மோடி ஆட்சிக்காலத்தில் அதிக நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது என்று அமித்ஷா கூறியுள்ளார்.
டேராடூன்,
உத்தரகாண்ட் மாநிலம் உத்தம்சிங் நகர் மாவட்டம் ருத்ராபூரில் முதலீட்டு திருவிழா நிகழ்ச்சி நடந்தது. அதில், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கலந்து கொண்டார்.
கடந்த 2023-ம் ஆண்டு கையெழுத்தான முதலீட்டு ஒப்பந்தங்களில் இருந்து ரூ.1 லட்சம் கோடிக்கான பணிகள் தொடங்கப்பட்டன. நிகழ்ச்சியில் அமித்ஷா பேசியதாவது:-
உத்தரகாண்ட் மாநிலம் வளர்ச்சி பாதையில் செல்லும்போது, காங்கிரஸ் கட்சி எப்போதும் எதிர்மறை அரசியல் செய்து வருகிறது. இது, பாலில் எலுமிச்சையை பிழிந்து, அதன் சுவையை புளிப்பு ஆக்குவதுபோல் இருக்கிறது. காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் 10 ஆண்டுகளில் உத்தரகாண்டுக்கு அளித்த நிதியை விட மோடி ஆட்சிக்காலத்தில் 3½ மடங்கு அதிக நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது.
வாஜ்பாய் ஆட்சியை விட்டு இறங்கியபோது, உலகில் பொருளாதாரத்தில் 11-வது இடத்தில் இருந்த இந்தியாவை 4-வது இடத்துக்கு மோடி முன்னேற்றி உள்ளார். 2027-ம் ஆண்டுக்குள் 3-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.






