ரூ. 10 கோடி மதிப்புள்ள போதைப்பொருளுடன் இளம்பெண் கைது - அதிர்ச்சி சம்பவம்

தலைமறைவாக உள்ள ராகுல் குமார், அவரது கூட்டாளி கோலியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
டேராடூன்,
நேபாளத்தில் இருந்து எல்லை வழியாக இந்தியாவுக்குள் போதைப்பொருள் கடத்தி வரப்படுவதாக உத்தரகாண்ட் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் நேபாள எல்லையில் உத்தரகாண்ட்டில் சாரதா கால்வாய் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, சந்தேகத்திற்கு இடமான வகையில் அப்பகுதியில் இளம்பெண் ஒரு பையுடன் சுற்றித்திரிந்தார்.
இதையடுத்து, அப்பெண்ணிடமிருந்த பையை கைப்பற்றிய போலீசார் அதில் சோதனை செய்தனர். அப்போது அந்த பையில் 5.6 கிலோ எடையுள்ள எம்டிஎம்ஏ வகை உயர்ரக போதைப்பொருள் இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். அந்த போதைப்பொருளின் சந்தை மதிப்பு ரூ. 10.23 கோடி ஆகும்.
போதைப்பொருளை கைப்பற்றிய போலீசார், அந்த பெண்ணை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அந்த பெண் உத்தரகாண்ட்டின் பன்பசா பகுதியை சேர்ந்த ஈஷா (வயது 22) என்பதும், அவரது கணவர் ராகுல் குமார் மற்றும் அவரின் கூட்டாளி குர்ணால் கோலி சேர்ந்து போதைப்பொருளை கடத்தி வந்ததாக தெரிவித்தார். இதையடுத்து தலைமறைவாக உள்ள ராகுல் குமார், அவரது கூட்டாளி கோலியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.






