மும்பை விமான நிலையத்தில் ரூ.8.5 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் - ஒருவர் கைது

பயணி வயிற்றில் விழுங்கி கடத்தி வந்த போதைப்பொருளை அதிகாரிகள் அப்புறப்படுத்தினர்.
மும்பை,
மும்பை விமான நிலையத்துக்கு கென்யாவில் இருந்து வந்த விமான பயணிகளிடம் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது நிக்லோஸ் என்ற பயணியின் நடவடிக்கையில் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அதிகாரிகள் அவரின் பைகளில் சோதனை நடத்தினர்.
ஆனால் சந்தேகத்துக்கு இடமாக எந்த பொருளும் பறிமுதல் செய்யப்படவில்லை. எனினும் பயணி மிகவும் பதற்றத்துடன் காணப்பட்டார். இதையடுத்து அதிகாரிகள் அவரை எக்ஸ்-ரே எடுத்து பார்த்தனர். அப்போது வயிற்றில் விழுங்கி போதைப்பொருளை கடத்தி வந்தது தெரியவந்தது.
இதையடுத்து மும்பையில் உள்ள ஜே.ஜே. ஆஸ்பத்திரியில் அவர் அனுமதிக்கப்பட்டார். உரிய அனுமதி பெற்று நேற்று அதிகாரிகள் அந்தப் பயணி வயிற்றில் விழுங்கி கடத்தி வந்த போதைப்பொருளை அப்புறப்படுத்தினர்.
பயணியின் வயிற்றில் இருந்து 50 கொகைன் போதைப்பொருள் கேப்சூல்கள் எடுக்கப்பட்டன. அதன் மதிப்பு ரூ.8 கோடியே 65 லட்சம் ஆகும். இதையடுத்து போதைப்பொருளை பறிமுதல் செய்த அதிகாரிகள் அந்தப்பயணியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






