‘விஜய் கூட்டணிக்கு வந்தாலும் முதல்-அமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி தான்’ - நடிகை கவுதமி திட்டவட்டம்

எடப்பாடி பழனிசாமி தமிழ்நாட்டை நல்ல திசையில் கொண்டு செல்வார் என நடிகை கவுதமி தெரிவித்துள்ளார்.
சென்னை,
சென்னை காசிமேட்டில் நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்கூட்டத்தில் நடிகை கவுதமி கலந்து கொண்டு பேசினார். அதன் பின்னர் நடந்த செய்தியாளர் சந்திப்பின்போது, “கரூர் துயர சம்பவம் தொடர்பான சி.பி.ஐ. விசாரணையை வரவேற்கிறோம். அதன் மூலம் உண்மைத் தன்மை வெளியே வரும் என்ற நம்பிக்கை உள்ளது” என்று தெரிவித்தார்.
இதையடுத்து விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சி அ.தி.மு.க. கூட்டணிக்கு வந்தால் யார் முதல்-அமைச்சர் வேட்பாளராக இருப்பார்? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த கவுதமி, “அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழ்நாட்டின் முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, கண்டிப்பாக தமிழ்நாட்டின் அடுத்த முதல்-அமைச்சராக வருவார். தமிழ்நாட்டை நல்ல திசையில் கொண்டு செல்வார்” என்றார். இதன் மூலம் த.வெ.க. கூட்டணிக்கு வந்தாலும் எடப்பாடி பழனிசாமி தான் முதல்-அமைச்சர் வேட்பாளர் என்பதை அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.






