குடும்ப பிரச்சினை: இளம்பெண் எடுத்த விபரீத முடிவு

கணவன், மனைவி இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
பெங்களூரு,
கர்நாடக மாநிலம் பாகல்கோட்டை மாவட்டம் பாதாமி அருகே கெரூரு கிராமத்தை சேர்ந்தவர் மஸ்தான் ஷாப். இவரது மனைவி பாத்திமா (வயது 21). இந்த தம்பதிக்கு 3 வயதில் அப்துல் என்ற ஆண் குழந்தை இருந்தது. கணவன், மனைவி இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. பாத்திமாவிடம் வரதட்சணை கேட்டு மஸ்தான்ஷாப் தொல்லை கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. மஸ்தான் ஷாப் தொல்லை தாங்க முடியாமல் பாதாமியில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு பாத்திமா தனது குழந்தையுடன் வந்திருந்தார்.
அப்போதும் பாத்திமாவுக்கு மஸ்தான் ஷாப் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இந்த நிலையில், நேற்று முன்தினம் தனது வீட்டின் அருகே உள்ள கிணற்றில் 3 வயது குழந்தையுடன் குதித்து பாத்திமா தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்ததும் பாதாமி போலீசார் விரைந்து வந்து கிணற்றில் இருந்து தாய், குழந்தையின் உடலை மீட்டனர். தங்களது மகள் சாவுக்கு மஸ்தான் ஷாப் தான் காரணம் என்றும், அவர் கொடுத்த தொல்லையால் மகள் தற்கொலை செய்திருப்பதாகவும் பாத்திமாவின் பெற்றோர் குற்றச்சாட்டு கூறியுள்ளனர். இதுகுறித்து பாத்திமாவின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் பாதாமி போலீசார், மஸ்தான் ஷாப் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






