பீகாரில் முதல் கட்ட சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவுக்கு ஏற்பாடுகள் தயார்
வாக்குச்சாவடிகளை சுற்றி 3 அடுக்கு பாதுகாப்புகள் போடப்பட்டுள்ளன.
பாட்னா,
பீகார் மாநில சட்டசபைக்கு (6-ம் தேதி மற்றும் 11-ந்தேதிகளில்) 2 கட்டங்க ளாக தேர்தல் நடக்கிறது. மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் முதல் கட்டமாக 121 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்பட உள்ளது.இந்த 121 தொகுதிகளிலும் நேற்று மாலை 5 மணி முதல் அனல் பறந்த பிரசாரம் ஓய்ந்தது. நேற்று இறுதி நாளில் தேசிய ஜன நாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மத்திய மந்திரிகள் அமித்ஷா, ராஜ்நாத்சிங் அதிரடி பிரசாரம் மேற்கொண்டனர்.
பிரதமர் மோடி நேற்று செல்போன் செயலி மூலம் பா.ஜ.க. பெண் தொண்டர்களுடன் கலந்துரையாடினார். ஐக்கிய ஜனதா தளம் தலைவரும், முதல்-மந்திரியுமான நிதிஷ்குமாரும் தீவிர ஓட்டு வேட்டை நடத்தினார். இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ராகுல் காந்தி 3 பொதுக்கூட்டங்களில் பேசினார். அந்த கூட்ட ணியின் முதல்-மந்திரி வேட்பாளரான தேஜஸ்வி யாதவும் சூறாவளி பிரசாரம் செய்தார்.
பிரசாரம் ஓய்ந்த நிலையில் நேற்று மாலை 5 மணிக்கு பிறகு தொகுதிக்கு சம்பந்தம் இல்லாதவர்கள் வெளியேற்றப்பட்டனர். 121 தொகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. எல்லைகள் சீல் வைக்கப்பட்டு உள்ளன.இதையடுத்து இன்று (புதன்கிழமை) காலை வாக்குச்சாவடி பணியாளர்கள் தேர்வு செய்யும் பணி நடந்தது. அதன் பிறகு அவர்களிடம் வாக்குப்பதிவுக்கான உபகரணங்கள் வழங்கப்பட்டன.
அந்த உபகரணங்களுடன் வாக்குச்சாவடி பணியாளர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு புறப்பட்டு சென்றனர். இன்று மாலை மாதிரி ஓட்டுப்பதிவு நடைபெற இருக்கிறது. இன்று இரவுக்குள் அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல் கட்ட ஓட்டுப்பதிவு நடக்கும் 121 தொகுதிகளிலும் 1,314 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இந்தியா கூட்டணியின் முதல்-மந்திரி வேட்பாளரான தேஜஸ்வி யாதவ் ரகோபூர் தொகுதி, துணை முதல்-மந்திரி சவுத்ரி போட்டியிடும் தாரப்பூர் தொகுதிகளில் முதல் கட்ட ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. 18 மாவட்டங்களில் உள்ள 121 தொகுதிகளிலும் அதிக வாக்குகள் பதிவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த 18 மாவட்டங்களிலும் 3.75 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் அச்சமின்றி வாக்களிப்பதற்காக 45,341 வாக்குச்சாவடிகள் உருவாக்கப்பட்டு உள்ளன. அந்த வாக்குச்சாவடிகளை சுற்றி 3 அடுக்கு பாதுகாப்புகள் செய்யப்பட்டு உள்ளன. தேர்தல் அசம்பாவிதத்தை தடுப்பதற்கு 824 பறக்கும் படை உருவாக்கப்பட்டு உள்ளது. இதனால் பீகாரில் உச்சக்கட்ட பரபரப்பு நிலவு கிறது.








