ராகுல் காந்தி அடிக்கடி வியட்நாம் செல்வது ஏன்? பாஜக கேள்வி

File Photo: PTI
ராகுல் காந்தியின் வெளிநாடு பயணங்களை பா.ஜனதா அடிக்கடி விமர்சித்து வருகிறது.
புதுடெல்லி,
மக்களவை எதிர்க்கட்சித்தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல் காந்தி தனிப்பட்ட பயணமாக வியட்நாம் சென்றுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. கடந்த ஆண்டு இறுதியிலும் அவர் அந்த நாட்டுக்கு சென்றிருந்தார். இவ்வாறு 3 மாத இடைவெளியில் 2 முறை ராகுல் காந்தி வியட்நாம் சென்றது ஏன்? என பா.ஜனதா கேள்வி எழுப்பி உள்ளது.
இது தொடர்பாக கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ரவிசங்கர் பிரசாத் கூறியதாவது:- ராகுல் காந்தி எங்கே? அவர் வியட்நாம் சென்றிருப்பதாக அறிந்தேன். புத்தாண்டிலும் அவர் வியட்நாமில்தான் இருந்தார். அப்போது சுமார் 22 நாட்களை அங்கே செலவிட்டார்.
இத்தனை அதிக நாட்களை தனது தொகுதியில் கூட அவர் செலவழித்ததில்லை. அப்படி தனது தொகுதியை விட வியட்நாம் மீது திடீரென அவருக்கு இவ்வளவு அதிக பாசம் ஏற்படுவதற்கான காரணம் என்ன? ராகுல் காந்தி வியட்நாம் மீது கொண்டுள்ள அசாதாரண பிணைப்பை விளக்க வேண்டும். அடிக்கடி அவர் அந்த நாட்டிற்கு பயணம் மேற்கொள்வது சுவராசியமாக உள்ளது. ராகுல் காந்தி, நாட்டின் எதிர்க்கட்சித்தலைவர். அவர் இந்தியாவில் இருக்க வேண்டும். இவ்வாறு ரவிசங்கர் பிரசாத் கூறினார்.
ராகுல் காந்தியின் வெளிநாடு பயணங்களை பா.ஜனதா அடிக்கடி விமர்சித்து வருகிறது. கடந்த ஆண்டு இறுதியில் அவர் வியட்நாம் சென்றபோதும் ஆளும் கட்சியினர் கடுமையாக விமர்சித்தனர்.
குறிப்பாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இறப்பால் நாடு முழுவதும் துக்கம் அனுசரித்தபோது ராகுல் காந்தி வெளிநாடு சென்றதை பா.ஜனதாவினர் கடுமையாக குற்றம் சாட்டினர். அதேநேரம் ராகுல் காந்தியின் தனிப்பட்ட பயணத்தை பா.ஜனதா அரசியலாக்குவதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. தனிநபர் ஒருவருக்கு வெளிநாடு செல்ல அனைத்து உரிமையும் உண்டு என்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் கூறியுள்ளனர்.