குஜராத்: அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து - 50 பேர் பத்திரமாக மீட்பு

கட்டிடத்திற்குள் சிக்கியிருந்த 50 பேரை தீயணைப்பு விரர்கள் பத்திரமாக மீட்டனர்.
காந்திநகர்,
குஜராத் மாநிலம் சூரத் மாவட்டத்தில் உள்ள வெசு பகுதியில் அமைந்திருக்கும் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தில், இன்று காலை 8 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. கட்டிடத்தின் 8-வது மாடியில் பற்றிய தீயானது, மளமளவென மற்ற தளங்களுக்கு பரவத் தொடங்கியது.
இது குறித்து தகவலறிந்து தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தீ விபத்து ஏற்பட்டதை அறிந்து கட்டிடத்தில் இருந்தவர்கள் பலர் கட்டிடத்தின் பால்கனிகளில் நின்று கொண்டிருந்தனர். தீயணைப்பு வீரர்கள் அவர்களை ஏணிகள் மூலம் மீட்டனர்.
இதற்கிடையில் கட்டிடத்திற்குள் சுமார் 50 பேர் சிக்கியிருந்த நிலையில், அவர்கள் அனைவரையும் தீயணைப்பு விரர்கள் பத்திரமாக மீட்டு அழைத்து வந்தனர். மறுபுறம் தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர்.
இதையடுத்து நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு தீ முழுவதுமாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை. இந்த தீ விபத்திற்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.






