கேரளாவில் கொட்டித்தீர்த்த கனமழை: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
கேரளாவில் கனமழை கொட்டி வருகிறது.
திருவனந்தபுரம்,
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளது. இதனால் எர்ணாகுளம், இடுக்கி, வயநாடு, திருச்சூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டி வருகிறது. மேலும், வயநாடு, கண்ணூர் மாவட்டங்களில் ஆரஞ்சு எச்சரிக்கையும், எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், பாலக்காடு, கோழிக்கோடு, மலப்புரம், காசர்கோடு ஆகிய 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.
கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து முன்னேற்பாடு பணிகளை கேரள அரசு தீவிரப்படுத்தியது. மேலும் பொதுமக்களுக்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. கோழிக்கோடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு பலத்த மழை பெய்தது.
இதனால் சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. தொட்டில்பாலம் பகுதியில் கிணறு இடிந்து விழுந்தது. மேலும் அந்தப்பகுதியில் கடல் சீற்றம் அதிகமாக இருந்தது. குறிப்பாக சாலையில் அரிப்பு ஏற்பட்டு கப்பாடு, கொயிலாண்டி கடல் எல்லை சாலைகள் தகர்ந்தன. இதனால் அந்த வழியாக போக்குவரத்து முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது.
கண்ணூர் மலையோர பகுதிகளில் கனமழை தொடர்ந்து பெய்து வருவதால் அங்குள்ள ஆறுகளில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. மேலும் அணைகளின் நீர்மட்டமும் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. பாதிக்கப்பட்ட மக்களை காப்பாற்ற 5 மழை வெள்ள நிவாரண முகாம்கள் திறக்கப்பட்டுள்ளது. மேலும் இங்கு வந்து செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டு உள்ளது.