இமாசல பிரதேசத்தில் கனமழை: பலி எண்ணிக்கை 241 ஆக உயர்வு

இமாசல பிரதேசத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 323 சாலைகள், 70 மின்மாற்றிகள் மற்றும் 130 நீர் விநியோக திட்டங்கள் பாதிக்கப்பட்டு உள்ளன.
சிம்லா,
வடமாநிலங்களில் ஒன்றான இமாசல பிரதேசத்தில், நடப்பு ஆண்டில் பரவலாக பல்வேறு இடங்களிலும் முன்பே தென்மேற்கு பருவமழை பெய்தது. தொடர்ந்து, பல நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அதனுடன் நிலச்சரிவு, வெள்ளம் மற்றும் மேகவெடிப்புகளும் ஏற்பட்டு மாநிலம் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது.
இமாசல பிரதேசத்தில் கடந்த பல நாட்களாக பெய்து வரும் மழையில் சிக்கி பலர் உயிரிழந்து உள்ளனர். இந்த நிலையில், மாநில பேரிடர் மேலாண் கழகம் வெளியிட்டு உள்ள அறிக்கையில், கடந்த 24 மணிநேரத்தில் கனமழை மற்றும் அது தொடர்பான சம்பவங்களில் மாநிலம் முழுவதும் 323 சாலைகள், 70 மின்மாற்றிகள் மற்றும் 130 நீர் விநியோக திட்டங்கள் பாதிக்கப்பட்டு உள்ளன என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பருவமழை தொடங்கியதில் இருந்து இதுவரை 241 பேர் உயிரிழந்து உள்ளனர். இவர்களில் மழை தொடர்பான உயிரிழப்புகளின் எண்ணிக்கை 126 ஆகும். சாலை விபத்துகளில் சிக்கி 115 பேர் உயிரிழந்ததும் இதில் அடங்கும். இதனால், இயற்கை பேரிடர்கள் மற்றும் உட்கட்டமைப்பு பாதிப்பு ஆகிய இரு வகை அச்சுறுத்தல்கள் ஏற்பட்டு உள்ளன என அந்த அறிக்கை தெரிவிக்கின்றது.
நிவாரண மற்றும் மீட்பு முயற்சிகள் நடந்து வரும் சூழலிலும், பல பகுதிகளை சென்றடைவது இயலாத ஒன்றாக உள்ளது. எனினும், போர்க்கால அடிப்படையில் மீட்பு பணிகள் நடந்து வருகின்றன என அதிகாரிகள் தெரிவித்தனர். பொதுமக்கள் தேவையற்ற பயணங்களை தவிர்க்கும்படியும் மாநில பேரிடர் மேலாண் கழகம் அறிவுறுத்தி உள்ளது.






