விமான நிலையத்தில் உயர் ரக போதைப்பொருள் பறிமுதல்: இளம்பெண் உள்பட 4 பேர் கைது

இளம்பெண் உள்பட 4 பேரை போலீசார் கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோழிக்கோடு,
கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தை சேர்ந்தவர் சூர்யா (வயது 31). இவர் ஓமனில் இருந்து விமானத்தில் கோழிக்கோடு விமான நிலையத்துக்கு வந்தார். அங்கு அவரது உடமைகள் சோதனை செய்யப்பட்டது. பின்னர் அவர் தனது ஊருக்கு செல்வதற்காக விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்தார். அப்போது அவரை அழைத்து செல்ல வந்திருந்த 3 ஆண் நண்பர்களுடன் காரில் ஏற முயன்றார்.
அவர்களது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த கரிப்பூர் போலீசார் சுற்றி வளைத்து சோதனை நடத்தினர். இதில் சூர்யா, மிட்டாய் பாக்கெட்டில் மறைத்து வைத்து 1 கிலோ எம்.டி.எம்.ஏ. என்ற உயர்ரக போதைப்பொருள் கடத்தி வந்தது கண்டறியப்பட்டது. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர். விசாரணையில் சூர்யாவின் ஆண் நண்பர்கள் மலப்புரம் மாவட்டம் திரூரங்காடி அருகே உள்ள முன்னியூர் பகுதியை சேர்ந்த அலி அக்பர் (31), ஷபீர் (30), வள்ளிக்குன்னு பகுதியை முகமது ராபி (37) ஆகியோர் என்பது தெரியவந்தது. தொடர்ந்து 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






