இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தினேன்: புதினை சந்தித்த பிறகு அளித்த பேட்டியில் டிரம்ப் பெருமிதம்

Photo: AP/PTI.
இந்தியா - பாகிஸ்தான் போர் நிறுத்தத்தில் எந்த நாடும் மத்தியஸ்தம் செய்யவில்லை என இந்தியா தொடர்ந்து கூறி வருகிறது.
நியூயார்க்:
இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போரை நானே தடுத்து நிறுத்தினேன் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார். சண்டை நிறுத்தம் வேண்டும் என பாகிஸ்தான் மட்டுமே வேண்டுகோள் விடுத்ததாகவும், மூன்றாம் தரப்பு நாடு எதுவும் இந்த விவகாரத்தில் தலையிடவில்லை என்று இந்தியா தொடர்ச்சியாகக் கூறி வருகிறது. ஆனாலும், டிரம்ப் தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தியதாகப் பேசி வருகிறார்.
இதுவரை 30-க்கும் மேற்பட்ட முறை டிரம்ப் இவ்வாறு கூறியுள்ள நிலையில், புதினைச் சந்தித்த பிறகு அளித்த பேட்டியில் இதே கருத்தை வலியுறுத்தியுள்ளார் டிரம்ப்.உக்ரைன் மீதான போரை நிறுத்துவது குறித்து அலாஸ்காவின் ஆங்கரேஜில் நேற்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் - ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் இடையே உயர்மட்டப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
சுமார் மூன்று மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு, இரு தலைவர்களும் செய்தியாளர்களைக் கூட்டாகச் சந்தித்தனர். பின்னர், இந்தியா - ரஷ்ய எண்ணெய்க் கொள்முதல் குறித்தும் கருத்து தெரிவித்த டிரம்ப், "அணு ஆயுதப் போராக வெடிக்கவிருந்த இந்தியா - பாகிஸ்தான் போர் உள்பட ஐந்து போர்களை நானே மத்தியஸ்தம் செய்து முடிவுக்குக் கொண்டு வந்துள்ளேன்" என்றார்.
இந்தியா-பாகிஸ்தான் போரை தான் தலையிட்டு நிறுத்தியதாக அமெரிக்க அதிபா் டிரம்ப் மீண்டும் மீண்டும் கூறிவரும் கருத்துகளை முன்வைத்து, பிரதமா் மோடி மற்றும் மத்திய அரசை எதிா்க்கட்சிகள் கடுமையாக விமா்சித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.






