மோடியின் தலைமை இல்லாவிட்டால்.. பாஜக 150 இடங்களில் கூட வெற்றி பெறாது - நிஷிகாந்த் துபே

நரேந்திர மோடியின் தலைமையில் பாஜக தேர்தலில் போட்டியிட வேண்டியது கட்டாயம் என்று நிஷிகாந்த் துபே தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
ஜார்க்கண்டின் கோடா மக்களவைத் தொகுதியைச் சேர்ந்த பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே தெரிவித்த கருத்து விவாதப் பொருளாக மாறி உள்ளது.
முன்னதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு நிஷிகாந்த் துபே அளித்த பேட்டியில், "பிரதமர் பதவி அடுத்த 15-20 ஆண்டுகளுக்கு காலியாக இருக்காது. ஏனெனில் நரேந்திர மோடி அடுத்த 15-20 ஆண்டுகளுக்கு பிரதமராக இருப்பார். நரேந்திர மோடியின் தலைமையில் பாஜக தேர்தலில் போட்டியிடவில்லை என்றால், 150 இடங்களை கூட வெல்ல முடியாது. நரேந்திர மோடியின் தலைமையில் பாஜக தேர்தலில் போட்டியிட வேண்டிய கட்டாயம் ஏற்படும்" என்று கூறினார்.
இதனைத்தொடர்ந்து யோகி ஆதித்யநாத் குறித்து அளிக்கப்பட்ட அறிக்கை குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர், அடுத்த இரண்டு தசாப்தங்களுக்கு (20 ஆண்டுகள்) பிரதமர் பதவி காலியாக இருக்காது என்றும், யோகி ஆதித்யநாத் ஏற்கனவே ஒரு பெரிய மாநிலத்தின் முதல்-மந்திரியாக உள்ளார் என்றும் கூறினார்.
பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே தனது கருத்தை வெளிப்படையாக தெரிவிப்பதில் பெயர் பெற்றவர் ஆவார். அவ்வப்போது, அவர் தனது இந்த செயலால் தலைப்புச் செய்திகளில் இடம் பெறுகிறார்.
சமீபத்தில், நரேந்திர மோடிக்குப் பிறகு பிரதமர் பதவிக்கு உ.பி. முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் மிகப்பெரிய போட்டியாளராக இருப்பாரா..? என்று அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த நிஷிகாந்த் துபே, அடுத்த 15-20 ஆண்டுகளுக்கு பிரதமர் பதவி காலியாக இருக்காது என்று கூறியிருந்தார். இருப்பினும், அந்த நேரத்தில் அடுத்த 15-20 ஆண்டுகளில் பிரதமர் பதவிக்கு யார் போட்டியிடுவார்கள் என்று அவர் கூறவில்லை. இப்போது அடுத்த 15-20 ஆண்டுகளுக்கு நரேந்திர மோடிதான் பிரதமர் பதவிக்கு மிகப்பெரிய போட்டியாளராக இருப்பார் என்பதை அவர் உறுதிபடுத்தி உள்ளார்.
கடந்த 11 ஆண்டுகளில் நாட்டில் நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும், பிரதமர் மோடியின் முகத்தை பாஜக முன்னணியில் வைத்திருக்கிறது. உங்கள் வாக்கு வேட்பாளருக்குச் செல்லாது, மாறாக நேரடியாக பிரதமர் மோடிக்குச் செல்லும் என்று பாஜக தரப்பில் பலமுறை கூறப்பட்டுள்ளது. இப்போது நிஷிகாந்த் துபேயும் நரேந்திர மோடியின் அந்த அரசியல் பிம்பத்தை மேற்கோள்காட்டி பேசி இருக்கிறார்.






