‘பீகாரில் ராஷ்டிரிய ஜனதா தளம் ஆட்சிக்கு வந்தால் காட்டாட்சி திரும்பிவிடும்’ - அமித்ஷா


‘பீகாரில் ராஷ்டிரிய ஜனதா தளம் ஆட்சிக்கு வந்தால் காட்டாட்சி திரும்பிவிடும்’ - அமித்ஷா
x

எதிர்காலத்தை யாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதை முடிவு செய்வதற்கான தேர்தல் இது என அமித்ஷா தெரிவித்துள்ளார்.

பாட்னா,

243 தொகுதிகளை கொண்ட பீகார் சட்டசபைக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 121 தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 6-ம் தேதியும், இரண்டாம் கட்டமாக 122 தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 11-ம் தேதியும் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அடுத்த மாதம் 14-ந்தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

பீகார் சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் 'மகாகத்பந்தன்' கூட்டணி ஆகிய 2 கூட்டணிகளுக்கிடையே கடும் போட்டி நிலவுகிறது. இதில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ஜ.க., ஐக்கிய ஜனதா தளம், ஜன்சக்தி கட்சி(ராம்விலாஸ்) உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. அதே போல் 'மகாகத்பந்தன்' கூட்டணியில் ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சி(மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்), இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன.

தேர்தல் நெருங்கி வரும் சூழலில் அரசியல் கட்சியினர் தற்போது தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, கோபால்கஞ்ச் மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் காணொலி காட்சி வாயிலாக பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது;-

“பீகாரின் எதிர்காலத்தை யாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதை முடிவு செய்வதற்கான ஒரு வாய்ப்பாக இந்தத் தேர்தல் அமைந்துள்ளது. ஒருபுறம் காட்டாட்சியை அறிமுகப்படுத்தியவர்கள் உள்ளனர். மறுபுறம், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முதல் மந்திரி நிதிஷ் குமார் ஆகிய இருவரும் வளர்ச்சியைக் கொண்டு வந்துள்ளனர். ராஷ்டிரிய ஜனதா தளம் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் காட்டாட்சி திரும்பிவிடும்

கோபால்கஞ்ச் மக்கள் 2002 முதல் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சிக்கு ஒருபோதும் வாக்களித்ததில்லை. அவர்கள் இந்த போக்கை தொடர்வார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன். எங்களது தேர்தல் அறிக்கையில் இரண்டு முக்கிய விஷயங்கள் உள்ளன - ஒன்று விவசாயிகளுக்கானது, மற்றொன்று பெண்களுக்கானது.

சமீபத்தில், நிதிஷ் குமாரும், பிரதமர் மோடியும் ‘ஜீவிகா’ திட்டத்தின்கீழ் 1.41 கோடி பெண்களின் கணக்குகளில் ரூ.10,000 டெபாசிட் செய்துள்ளனர். பீகாரின் 27 லட்சம் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 வழங்குகிறோம். இப்போது, ​​இதனுடன் ரூ.3,000 சேர்த்து ரூ.9,000 வழங்குவோம். அடுத்த 5 ஆண்டுகளில் மாநிலத்தில் உள்ள அனைத்து சர்க்கரை ஆலைகளும் மீண்டும் திறக்கப்படும்.”

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story