பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டால்... அரசியல் பொதுக்கூட்டத்தில் அமித்ஷா பரபரப்பு பேச்சு

பீகாரில் ஆயுத தொழிற்சாலை ஒன்றை பிரதமர் மோடி ஏற்படுத்த போகிறார் என அமித்ஷா கூறினார்.
சசராம்,
243 தொகுதிகளை கொண்ட பீகார் சட்டசபைக்கு நவம்பர் மாதம் 6, 11 ஆகிய நாட்களில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. முதற்கட்டமாக 121 தொகுதிகளுக்கும், இரண்டாம் கட்டமாக 122 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் 14-ந்தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இதன்படி, முதல்கட்ட தேர்தல் கடந்த 6-ந்தேதி காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை அமைதியாக நடந்து முடிந்தது. பெரிய அளவில் வன்முறை சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை. இதில் 64.66 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. இதனை தொடர்ந்து, 2-வது கட்ட தேர்தல் நாளை மறுநாள் நடைபெற உள்ளது. இதற்கான பிரசார பணிகளில் கட்சிகள் இன்று ஈடுபட்டன.
இந்நிலையில், 2-ம் கட்ட சட்டசபை தேர்தலை முன்னிட்டு சசராம் நகரில் அரசியல் பொதுக்கூட்டம் ஒன்றில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இன்று கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், சக்தி பீடத்திற்கான இந்த புனித நிலத்தில், நான் கூறுகிறேன். பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டால், துப்பாக்கி குண்டால் பதிலடி தரப்படும்.
இந்த துப்பாக்கி குண்டு தயாரிக்க போவது எங்கே என தெரியுமா? பிரதமர் மோடி பாதுகாப்பு தளம் ஒன்றை நிறுவ இருக்கிறார். பீகாரில் ஆயுத தொழிற்சாலை ஒன்றை ஏற்படுத்த போகிறார் என்றார்.
சோனியா, மன்மோகன் மற்றும் லாலு பிரசாத் ஆட்சியில் இருந்தபோது, பயங்கரவாதிகள் வருவார்கள். நம் நிலத்தின் மீது தாக்குதல் நடத்தி விட்டு தப்பி விடுவார்கள். கேள்வியே கிடையாது. பிரதமர் மோடி அரசு ஆட்சிக்கு வந்த பின்னர், உரி தாக்குதலுக்கு நாங்கள் துல்லிய தாக்குதலை பதிலடியாக கொடுத்தோம். புல்வாமா தாக்குதலுக்கு வான்வழி தாக்குதலை பதிலடியாக தந்தோம் என்றார்.






