‘2047-ல் இந்தியா வல்லரசாக மாறும்’ - இஸ்ரோ முன்னாள் தலைவர் சோம்நாத்

நமது ஆன்மீகம் நவீன அறிவியலின் நுண்ணறிவுகளை உள்ளடக்கியது என சோம்நாத் தெரிவித்துள்ளார்.
‘2047-ல் இந்தியா வல்லரசாக மாறும்’ - இஸ்ரோ முன்னாள் தலைவர் சோம்நாத்
Published on

டேராடூன்,

உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் நடைபெற்ற அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தின் (ABVP) 71-வது மாநாட்டின் தொடக்க விழாவில் இஸ்ரோ முன்னாள் தலைவர் சோம்நாத் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

நம்பிக்கையும், நிதர்சனமும் ஒன்றையொன்று பூர்த்தி செய்வது போல், அறிவியலும், ஆன்மீகமும் இணைந்து இயங்க முடியும். நமது முனிவர்களும், துறவிகளும் கணிதம், வானியல், உலோகவியல், கட்டிடக்கலை மற்றும் மருத்துவம் ஆகியவற்றை ஆராய்ந்தனர். நமது ஆன்மீகம் நவீன அறிவியலின் நுண்ணறிவுகளை உள்ளடக்கியது.

இந்தியா முன்னேறி வருகிறது என்பது அனைவருக்கும் தெரியும். இது மக்களிடையே புதிய நம்பிக்கையை விதைத்து வருகிறது. உலகில் இந்தியா வித்தியாசமாகப் பார்க்கப்படுவது இதுவே முதல் முறை. இது சாத்தியமானதற்கு காரணம், நாம் ஜனநாயக ஸ்திரத்தன்மையின் தூண்களாக இருக்கிறோம் என்பதுதான்.

இன்றைய இந்தியா ஒரு இளமையான நாடு. நமது மக்கள் தொகையில் 25 சதவீதம் பேர் இளைஞர்கள். அடுத்த 25 ஆண்டுகளுக்கு இதே நிலை நீடிக்கும். இது நமக்கு நன்மை பயக்கும். 2047 ஆம் ஆண்டில் இந்தியா ஒரு வல்லரசாக மாறும். விண்வெளி தொழில்நுட்பம் மற்றும் உற்பத்தி துறையில் இந்தியா முன்னணியில் இருக்கும்.

அரசாங்கம் இப்போது அணுசக்தித் துறையில் தனியார் நிறுவனங்களை அனுமதிக்கப் போகிறது. இது இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும். மேலும் இளைஞர்களும் பசுமை தொழில்நுட்பத்தில் பங்கேற்பதற்கான வாய்ப்புகளும் கிடைக்க உள்ளன. சந்திரயான் 3 மூலம், சந்திரனின் தெற்குப் பகுதியை அடைந்த உலகின் முதல் நாடாக இந்தியா ஆனது. ஆதித்யா எல்-1 மூலம், சூரியனை நோக்கியும் நாம் அடியெடுத்து வைத்திருக்கிறோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com