சீனாவுக்கு இந்தியாவின் ஏற்றுமதி 33 சதவீதம் அதிகரிப்பு

இந்தியா அதிகமாக ஏற்றுமதி செய்யும் நாடாக சீனா உருவெடுத்துள்ளது.
புதுடெல்லி,
ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளை தண்டிக்க அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நடவடிக்கை எடுத்து வருகிறார். அதன்படி ரஷியாவிடம் இருந்து இந்தியா மலிவு விலையில் கச்சா எண்ணெய் வாங்குவதை தடுப்பதற்காக இந்திய பொருட்கள் மீது கூடுதலாக 25 சதவீத வரி விதித்தார்.
இதன் தொடர்ச்சியாக, ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா, சீனா, பிரேசில் ஆகிய நாடுகள் கைவிடுவதற்காக, அந்நாடுகள் மீது 500 சதவீத வரி விதிக்க டிரம்ப் திட்டமிட்டுள்ளார். இது தொடர்பாக புதிய மசோதா ஒன்றை அமெரிக்க செனட் உறுப்பினர் லிண்ட்சே கிரஹாம் மற்றொரு உறுப்பினர் புளுமெந்தாருடன் இணைந்து உருவாக்கி இருக்கிறார்.
ரஷியா பொருளாதார தடை மசோதா எனப்படும் இந்த மசோதாவுக்கு டிரம்ப் தற்போது ஒப்புதல் அளித்து உள்ளார். இது விரைவில் நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டு உள்ளது. இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா அதிக வரி விதிப்பதால், ஏற்றுமதிக்கு வேறு நாடுகளை இந்தியா நாடத் தொடங்கி உள்ளது. அதன்படி, இந்தியா அதிகமாக ஏற்றுமதி செய்யும் நாடாக சீனா உருவெடுத்துள்ளது.
நடப்பு நிதியாண்டில், ஏப்ரல் முதல் நவம்பர் மாதம் வரையிலான காலத்தில் சீனாவுக்கு இந்தியா ஏற்றுமதி செய்த பொருட்களின் மதிப்பு 1,222 கோடி டாலராக உயர்ந்துள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 33 சதவீதம் அதிகம். எண்ணெய் உணவுப்பொருட்கள், கடல்சார் தயாரிப்புகள், தொலைத்தொடர்பு சாதனங்கள், மசாலா பொருட்கள் ஆகியவற்றால் ஏற்றுமதி அதிகரித்துள்ளது.






