மகளை அடித்துக்கொன்றுவிட்டு தாய் தூக்கிட்டு தற்கொலை - அதிர்ச்சி சம்பவம்

ரமணா அண்டை வீட்டார் உதவியுடன் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளார்.
பெங்களூரு,
கர்நாடக மாநிலம் சிவமொக்கா மாவட்டத்தை சேர்ந்தவர் ரமணா நாயக். இவர் சிவமொக்காவில் உள்ள அரசு மருத்துவமனையில் லேப் டெக்னீசியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமாகி ஸ்ருதி (வயது 38) என்ற மனைவியும், பூர்விகா (வயது 12) என்ற மகளும் இருந்தனர்.
இந்நிலையில், ரமணா நேற்று இரவு மருத்துவமனைக்கு பணிக்கு சென்றுவிட்டார். இரவு பணியை நிறைவு செய்து இன்று காலை ரமணா வீட்டிற்கு சென்றுள்ளார். வீட்டின் காலிங் பெல்லை வெகுநேரம் அடித்தும் மனைவியோ, மகளோ கதவை திறக்கவில்லை. செல்போனில் தொடர்புகொண்டபோதும் யாரும் எடுக்கவில்லை.
இதனால் சந்தேகமடைந்த ரமணா அண்டை வீட்டார் உதவியுடன் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளார். அங்கு மகள் பூர்விகா ரத்த வெள்ளத்தில் வீட்டின் அறையில் உயிரிழந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். மேலும், வீட்டில் உள்ள மற்றொரு அறையில் மனைவி ஸ்ருதி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. விரைந்து வந்த போலீசார் 2 பேரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் மகள் பூர்விகாவை தாயார் ஸ்ருதி அடித்துக்கொலை செய்துவிட்டு பின்னர் தானும் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்துள்ளது. ஸ்ருதி கடந்த சில மாதங்களாக மனநல பாதிப்பில் இருந்ததாகவும், அதற்காக மருந்துகள் எடுத்து வந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






