வாக்குச்சாவடி அலுவலர் தற்கொலை; வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி காரணம் என குடும்பத்தினர் குற்றச்சாட்டு

தமிழகம், கேரளா உள்பட பல்வேறு மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணி நடைபெற்று வருகிறது.
திருவனந்தபுரம்,
தமிழகம், கேரளா உள்பட பல்வேறு மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியில் ஆசிரியர்கள் உள்பட அரசு ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே, கேரள மாநிலம் கன்னூர் மாவட்டத்தை சேர்ந்த அரசு ஊழியர் அனீஸ் ஜார்ஜ் (வயது 44). பள்ளியில் பணியாற்றி வந்த இவர் வாக்குச்சாவடி அலுவலராக செயல்பட்டு வந்தார். இவர் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணியில் ஈடுபட்டு வந்தார்.
இந்நிலையில், அனீஸ் ஜார்ஜ் நேற்று தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார் ஜார்ஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதேவேளை, வாக்காளர் பட்டியல் திருத்தப்பணியில் உள்ள வேலை அழுத்தம் காரணமாகவே அனீஸ் ஜார்ஜ் தற்கொலை செய்துகொண்டதாக குடும்பத்தினர் குற்றஞ்சாட்டி வருகின்றனர். அனீஸ் ஜார்ஜின் தற்கொலை மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் வாக்குச்சாவடி அலுவலர் பணியில் உள்ள வேலை பளுவை குறைக்க வலியுறுத்தி இன்று மாநிலம் தழுவிய அளவில் போராட்டம் நடத்த அரசு ஊழியர்கள் சங்கம் திட்டமிட்டுள்ளது.






