கேரள முதல்-மந்திரியாக தொடர பினராயி விஜயன் தகுதியற்றவர்; காங்கிரஸ் தலைவர் விமர்சனம்

காவல் துறை முதல்-மந்திரி கட்டுப்பாட்டில் இல்லை என்று காங்கிரஸ் தலைவர் விமர்சனம் செய்துள்ளார்
திருவனந்தபுரம்,
கேரள முதல்-மந்திரியாக தொடர பினராயி விஜயன் தகுதியற்றவர் என்று மாநில காங்கிரஸ் தலைவர் சதீசன் விமர்சனம் செய்துள்ளார்.
இது தொடர்பாக சதீசன் இன்று செய்தியாளர்களிடம் பேசியதாவது,
அனைத்து மாவட்டங்களிலும் போலீசார் சித்ரவதையால் காவல் மரணங்கள் நடைபெற்றுள்ளதாக செய்திகள் வருகின்றன. காவல்துறையின் அட்டூழியங்கள் குறித்து பல புகார்கள் வந்த பிறகும், முதல்-மந்திரி ஏன் மௌனம் காக்கிறார் என்று எனக்கு ஆச்சரியமாக உள்ளது. காவல் துறை முதல்-மந்திரி கட்டுப்பாட்டில் இல்லை. காவல் துறையில் அதிகார அமைப்பு சரிவர செயல்படவில்லை. முதல்-மந்திரி அலுவலகத்தில் உள்ள கூட்டம் காவல் துறையை கட்டுப்பாட்டில் எடுத்துள்ளது.
மாநிலம் முழுவதும் அமீபா மூளைக்காய்ச்சலுக்கு 16 பேர் உயிரிழந்துவிட்டனர். அமீபா மூளைக்காய்ச்சல் பரவுவதற்கான காரணத்தை மாநில சுகாதாரத்துறையால் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த மூளைக்காய்ச்சல் தொடர்பாக போதிய எச்சரிக்கையும் சுகாதாரத்துறை அளிக்கவில்லை. ஏனென்றால் மாநில சுகாதாரத்துறையே வெண்டிலேட்டரில் உள்ளது. கேரள முதல்-மந்திரியாக தொடர பினராயி விஜயன் தகுதியற்றவர். அவர் பதவி விலக வேண்டும்
என்றார்.






