பள்ளி மாணவிகளை ஆர்.எஸ்.எஸ். பாடல் பாட வைத்த விவகாரம் - கேரள அரசு கண்டனம்


பள்ளி மாணவிகளை ஆர்.எஸ்.எஸ். பாடல் பாட வைத்த விவகாரம் - கேரள அரசு கண்டனம்
x

சொந்த நாட்டின் பெருமை பற்றி பாடல் பாடியதில் எந்த தவறும் இல்லை என கேரள பா.ஜ.க. தலைவர் ராஜீவ் சந்திரசேகர் கூறியுள்ளார்.

திருவனந்தபுரம்,

கேரளாவில் எர்ணாகுளம்-பெங்களூரு இடையே வந்தே பாரத் ரெயில் சேவை தொடக்க விழாவில் பள்ளி மாணவிகள் விநாயகரை மையப்படுத்திய ஆர்.எஸ்.எஸ். பாடலை பாடினர். இந்த விவகாரம் சர்ச்சைக்குள்ளாகி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக தெற்கு ரெயில்வேக்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் தனது முகநூல் பக்கத்தில் கண்டன அறிக்கையை பதிவிட்டுள்ளார். அதில், “எர்ணாகுளம் வந்தே பாரத் தொடக்க விழாவில் பள்ளி மாணவ, மாணவிகளை ஆர்.எஸ்.எஸ். பாடலை பாட வைத்தது கடும் கண்டனத்திற்குரியது. வகுப்புவாத சித்தாந்தத்திற்கும், வெறுப்புணர்ச்சிக்கும் பெயர் பெற்ற ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பாடலை அரசு நிகழ்வில் பயன்படுத்துவது அரசியலமைப்பின் கோட்பாடுகளை மீறும் செயலாகும்” என தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி விளக்க அறிக்கை சமர்ப்பிக்க பொது கல்வித்துறை இயக்குனருக்கு மந்திரி சிவன்குட்டி உத்தரவிட்டுள்ளார். இந்த விவகாரத்தில் எழுந்த சர்ச்சைக்கு பா.ஜ.க. தலைவர்களும் பதிலடியாக கருத்துகளை தெரிவித்துள்ளனர். மத்திய இணை மந்திரி சுரேஷ்கோபி கூறுகையில், “மாணவிகள் அப்பாவித்தனமாக பாடியுள்ளனர். இது என்ன பயங்கரவாதிகள் பாடிய பாடலா?” என காட்டமாக பேசினார்.

பா.ஜ.க. மாநில தலைவர் ராஜீவ் சந்திரசேகர் கூறுகையில், “சொந்த நாட்டின் பெருமை பற்றி பாடல் பாடியதில் எந்த தவறும் இல்லை. தேச பக்தி கீதம் பாடிய மாணவிகளை பாராட்ட வேண்டும். கருத்து சுதந்திரத்தில் தலையிட பினராயி விஜயனுக்கு உரிமை இல்லை” என்றார்.

1 More update

Next Story