பாஜக முன்னாள் செய்தி தொடர்பாளர் ஆர்த்தி சாத்தே மும்பை ஐகோர்ட்டு நீதிபதியாக நியமனம்

ஆர்த்தி சாத்தே நியமனத்திற்கு மராட்டியத்தில் உள்ள எதிர்க்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
மும்பை,
பாஜக முன்னாள் செய்தி தொடர்பாளரான ஆர்த்தி சாத்தேவை ஐகோர்ட்டு நீதிபதி பதவிக்கு சுப்ரீம் கோர்ட்டு கொலீஜியம் பரிந்துரைத்தது. இதன்படி அவர் நேற்று மும்பை ஐகோர்ட்டு நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டார். 2023-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் 2024-ம் ஆண்டு ஜனவரி மாதம் வரையில் ஆர்த்தி சாத்தே பா.ஜனதா செய்தி தொடர்பாளராக இருந்தவர். இதன்பின்னர் தனிப்பட்ட காரணங்களுக்காக கட்சி பதவியை ராஜினமா செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில் மும்பை ஐகோர்ட்டு நீதிபதியாக ஆர்த்தி சாத்தே நியமிக்கப்பட்டதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், பா.ஜனதா கட்சி அவர் 2 ஆண்டுகளுக்கு முன்பே கட்சியில் இருந்து ராஜினாமா செய்துவிட்டதாக கூறி உள்ளது.
இதுகுறித்து தேசியவாத காங்கிரஸ்(எஸ்.பி.) கட்சி எம்.எல்.ஏ. ரோகித்பவார் நேற்று கூறியதாவது:-
ஒரு நீதிபதி ஆளும் கட்சியின் முன்னாள் உறுப்பினராக இருக்கும்போது, அரசுக்கு எதிரான வழக்குகளில் கோர்ட்டை நாடும் மக்கள் எப்படி நீதியை எதிர்பார்க்க முடியும். பொதுமேடைகளில் ஒரு அரசியல் கட்சியில் வெளிப்படையாக செயல்பட்ட ஒருவரை நீதிபதியாக அறிவிப்பது, ஜனநாயகத்திற்கு ஏற்பட்ட மிகப்பெரிய அடிகளில் ஒன்றாகும். இது இந்திய நீதித்துறையின் பாரபட்சமற்ற தன்மையை மோசமாக பாதிக்கும்.
விவசாயிகள் தற்கொலை, நில மோசடி அல்லது அரசால் ஏற்படும் சுற்றுச்சூழல் பிரச்சினைகளில் அரசியல் பின்னணி கொண்ட ஒரு நீதிபதி பாரபட்சமற்ற தீர்ப்புகளை வழங்குவாரா?.இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து பாஜக செய்தி தொடர்பாளரான கேசவ் உபாத்யே கூறுகையில், “ஆர்த்தி சாத்தே 2 ஆண்டுகளுக்கு முன்பே பா.ஜனதாவுடனான அனைத்து உறவுகளையும் துண்டித்துக்கொண்டார். கடந்த காலங்களில் காங்கிரஸ் எம்.பி.க்கள் நீதிபதிகளாகி மீண்டும் எம்.பி.க்களான சம்பவங்கள் நடந்துள்ளன. நீதித்துறையில் நியமனம் பெறுவதை தடுக்க, அரசியல் தொடர்பு ஒன்றை மட்டுமே காரணமாக கூற முடியாது” என்றார்.






