மராட்டியம்: பெண் மருத்துவர் தற்கொலை சம்பவம்: மாநிலம் முழுவதும் மருத்துவர்கள் போராட்டம்


மராட்டியம்:  பெண் மருத்துவர் தற்கொலை சம்பவம்: மாநிலம் முழுவதும் மருத்துவர்கள் போராட்டம்
x

போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோபால் பதானே தலைமறைவாகிவிட்டார், அவரை போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

மும்பை,

மராட்டிய சத்தாரா மாவட்டம் பல்தானில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் 28 வயது பெண் ஒருவர் டாக்டராக பணி செய்து வந்தார்.பீட் மாவட்டத்தை சேர்ந்தவரான அந்த பெண் டாக்டர் பல்தானில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வாடகை வீடு எடுத்து தங்கி ஆஸ்பத்திரிக்கு பணிக்கு சென்று வந்தார்.இதற்கிைடயே அவர் ஆஸ்பத்திரி அருகே உள்ள ஓட்டல் அறையில் அவ்வப்போது தங்குவதையும் வாடிக்கையாக வைத்திருந்ததாக கூறப்படுகிறது. அதன்படி புதன்கிழமை அவர் ஓட்டல் அறையில் தங்கியுள்ளார். நேற்று முன்தினம் அவர் நாள் முழுவதும் ஓட்டல் அறையில் இருந்து வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த ஓட்டல் ஊழியர்கள் இரவில் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து மாற்றுச்சாவி மூலம் கதவை திறந்து உள்ளே சென்றனர். அப்போது பெண் டாக்டர் மின்விசிறியில் தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் டாக்டரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே பெண் டாக்டர் தனது உள்ளங்கையில் தற்கொலை குறிப்பை எழுதி இருந்தார். அதில் பல்தான் நகர போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வரும் சப்-இன்ஸ்பெக்டர் கோபால் பதானே மற்றும் சாப்ட்வேர் என்ஜினீயரான பிரசாந்த் பங்கர் மீது பலாத்காரம் மற்றும் உடல், மன ரீதியாக தொல்லை கொடுத்ததாகவும் குற்றம்சாட்டி இருந்தார். இதில் சப்-இன்ஸ்பெக்டர் 4 தடவை தன்னை கற்பழித்ததாகவும், 5 மாதங்களாக தொல்லை கொடுத்ததாகவும் குறிப்பிட்டு இருந்தார்.தற்கொலை வழக்குகளில் கடித வடிவில் குறிப்புகள் சிக்குவது வழக்கம். ஆனால் இந்த வழக்கில் தற்கொலை செய்து ெகாண்ட பெண் டாக்டர் உள்ளங்கையில் தற்கொலை குறிப்பை எழுதி இருக்கிறார்.

இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பெண் டாக்டர் குற்றம்சாட்டி இருக்கும் போலீஸ் அதிகாரியை உடனடியாக பணி இடைநீக்கம் செய்யும்படி முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் சத்தாரா மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு உத்தரவிட்டார். அதன்படி சப்-இன்ஸ்பெக்டர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்மேலும் சப்-இன்ஸ்பெக்டர் கோபால் பதானே மற்றும் சாப்ட்வேர் என்ஜினீயர் பிரசாந்த் பங்கர் மீது பலாத்காரம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். மேலும் டாக்டரின் தற்கொலை குறிப்பின் அடிப்படையில் தீவிர விசாரணையை தொடங்கி உள்ளனர்.

பெண் மருத்துவர் தற்கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான பிரசாந்த் பங்கரை சதாரா போலீஸார் இன்று கைது செய்தனர். மற்றொரு குற்றவாளியான போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோபால் பதானே தலைமறைவாகிவிட்டார், அவரை போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். தற்கொலை செய்து கொண்ட பெண் ஜூன் 19 அன்று பால்டன் துணை காவல் கண்காணிப்பாளரை (டிஎஸ்பி) சந்தித்து, மூன்று போலீஸ் அதிகாரிகள் மீது புகார் அளித்திருந்தார். அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படாததால்தான் பெண் மருத்துவர் தற்கொலை செய்துகொண்டதாக மருத்துவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும், இந்த விவகாரத்தில் எம்.பி ஒருவருக்கு தொடர்பு உள்ளதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. இதனை தொடர்ந்து மகாராஷ்டிரா ரெசிடென்ட் டாக்டர்கள் சங்கத்தின் (MARD) மருத்துவர்கள், மும்பையில் உள்ள கே.இ.எம் மருத்துவமனையில் இன்று போராட்டங்களை நடத்தினர். மேலும், மாநிலம் முழுவதும் 8 ஆயிரம் மருத்துவர்கள் இந்தப் போராட்டத்தின் ஒரு பகுதியாக தங்கள் கைகளில் கருப்பு பட்டைகளை அணிந்திருந்தனர்.

1 More update

Next Story