எஸ்.ஐ.ஆர்க்கு எதிராக மம்தா பானர்ஜி பிரமாண்ட பேரணி

வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணிகளை கண்டித்து மேற்கு வங்காளத்தில் முதல்-மந்திரி மம்தா பானர்ஜி பேரணியாக சென்றார்.
எஸ்.ஐ.ஆர்க்கு எதிராக மம்தா பானர்ஜி பிரமாண்ட பேரணி
Published on

கொல்கத்தா,

பீகார் மாநிலத்தைத் தொடர்ந்து சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள தமிழகம், கேரளம், மேற்கு வங்காளம் உள்ளிட்ட மாநிலங்களில் எஸ்.ஐ.ஆர். எனும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி நடைபெற்று வருகிறது. அடுத்த மாதம் (டிசம்பர்) 4-ந் தேதியுடன் இந்தப்பணியை நிறைவு செய்ய தேர்தல் கமிஷன் உத்தரவிட்டு உள்ளது. இன்னும் 9 நாட்களே உள்ள நிலையில் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. எஸ்.ஐ.ஆர் பணிகளுக்கு இந்தியா கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதனிடையே எஸ்ஐஆர் பணிகளில் ஈடுபட்டு வரும் அரசு ஊழியர்கள் கடும் மன அழுத்தத்திற்கு ஆளாகி வருவதாகக் கூறப்படுகிறது. மேற்கு வங்காளத்தில் எஸ்ஐஆர் பணிகளில் ஈடுபட்ட பலரும் இறக்க நேரிட்டதாக திரிணமூல் காங்கிரஸ் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது.

இந்நிலையில் எஸ்ஐஆர் பணிகளை நிறுத்தக்கோரி மேற்குவங்கத்தில் முதல்வர் மமதா பானர்ஜி தலைமையில் இன்று(நவ.25) வடக்கு 24 பர்கானா மாவட்டத்தில் பிரமாண்ட பேரணி நடைபெற்றது. பங்கான் சந்த்பாரா பகுதியில் இருந்து தாகூர் நகரில் உள்ள மத்வா வரை 3 கிமீ தூரத்திற்கு மமதா பேரணியில் நடந்தே சென்றார். இந்த பேரணியில் மேற்கு வங்க மந்திரிகள், திரிணமுல் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் இந்த பேரணியில் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து தாகூர் நகரில் உள்ள பள்ளியில் மம்தா பானர்ஜி பேசியதாவது:-

ரெயில்கள், விமானங்கள், எல்லைகள் ஆகிய மத்திய அரசின் அமைப்புகளின் கட்டுப்பாட்டில் உள்ளன. பாஸ்போர்ட், சுங்கம், கலால் வரி அனைத்தையும் மத்திய அரசு கவனித்துக்கொள்கிறது. பின்னர் எப்படி மேற்கு வங்காளத்தில் வங்காள தேசக்காரர்களை நாங்கள் ஊடுருவ வைத்தோம்?

எஸ்ஐஆர் பணிகளை அவசரம் அவசரமாகச் செய்கிறார்கள். மக்களாகிய உங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டால் மத்திய அரசும் நீக்கப்பட வேண்டும். இவ்வளவு அவசரமாக ஏன் எஸ்ஐஆர் பணிகள் நடக்கின்றன? ஆளும் கட்சியைப் பற்றி எனக்கு எந்த பயமும் இல்லை. பாஜக அரசியல் ரீதியாக என்னை எதிர்த்துப் போராடி தோற்கடிக்க முடியாது. 2026ல் பாஜக ஆட்சி இருக்காது.

இவ்வாறு அவர் கூறினார்.

பாஜகவின் அஸ்திவாரத்தையே அசைக்கும் வகையில் போராட்டம் நடத்தப்படும் என மம்தா பானர்ஜி அறிவித்து இருந்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com