சாமியார் வேடம் போட்டு... 10 ஆண்டுகளுக்கு பின்பு மனைவியை தேடி சென்று தீர்த்து கட்டிய நபர்

கிரண், அவருடைய மகன் துர்கேஷ் ஜா, மருமகள் கமல் ஜா மற்றும் பேத்தியுடன் ஒன்றாக வசித்து வந்துள்ளார்.
புதுடெல்லி,
டெல்லியின் தெற்கே நெப் சராய் பகுதியில் வசித்து வந்தவர் கிரண் ஜா. இந்நிலையில், நேற்று அதிகாலை வீட்டில் படுகாயங்களுடன் உயிரிழந்து கிடந்த கிரணை அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி அதிகாலை 4 மணியளவில் போலீசாருக்கு தகவல் சென்றது. அவர்கள் சி.சி.டி.வி. பதிவுகளை ஆய்வு செய்தனர்.
அதில் பிரமோத் ஜா (வயது 55) என்பவர் கிரணின் வீட்டுக்கு வந்து சென்றது தெரிய வந்துள்ளது. போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், பிரமோத் ஜா பீகாரில் வசித்து வருவது தெரிந்தது. அவருடைய மனைவியே கொல்லப்பட்ட கிரண் ஆவார். கிரண், சுகாதார உதவியாளராக பணியாற்றி வந்திருக்கிறார்.
10 ஆண்டுகளுக்கு முன்பு, கிரணை பிரிந்து சென்று பிரமோத் ஜா தனியாக வசித்து வருகிறார். கிரண், அவருடைய மகன் துர்கேஷ் ஜா, மருமகள் கமல் ஜா மற்றும் பேத்தியுடன் ஒன்றாக வசித்து வந்துள்ளார். பீகாரின் தர்பங்கா பகுதியில் நிதி நிறுவனம் ஒன்றில் துர்கேஷ் பணியாற்றி வருகிறார். சம்பவத்தின்போது, அவர் டெல்லியில் இல்லை.
பீகாரின் முங்கர் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் இருந்து சமீபத்தில் பிரமோத் ஜா டெல்லிக்கு வந்துள்ளார். அவர் அடையாளம் தெரிந்து விட கூடாது என்பதற்காக, தலையை மொட்டையடித்து, சாமியார் வேடத்தில் வந்து, கிரணை கொலை செய்து விட்டு தப்பி சென்றிருக்கிறார்.
இந்த கொலைக்கான காரணம் என்னவென்று உடனடியாக தெரிய வரவில்லை. சம்பவ பகுதியில் இருந்து, கொலைக்கு பயன்படுத்திய சுத்தியல் ஒன்றை போலீசார் கைப்பற்றினர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.






