வனத்துறை அதிகாரியை சுட்டுக்கொல்ல முயன்ற கணவன் - அதிர்ச்சி சம்பவம்

சோலங்கி வனத்துறை அதிகாரியாக செயல்பட்டு வருகிறார்.
காந்தி நகர்,
குஜராத் மாநிலம் சூரத் மாவட்டம் கதோர் கிராமத்தை சேர்ந்தவர் நிகஞ் கோஸ்வாமி. இவரது மனைவி சோலங்கி. இவர் வனத்துறை அதிகாரியாக செயல்பட்டு வருகிறார்.
இதனிடையே, கடந்த சில மாதங்களாக சோலங்கிக்கும் அவரது கணவர் கோஸ்வாமிக்கும் இடையே கருத்து மோதல் நிலவி வந்தது. மேலும், குடும்ப வன்முறையில் ஈடுபடுவதாக கோஸ்வாமி மீது சோலங்கி போலீசில் புகார் அளித்தார். அந்த புகார் தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், கருத்துவேறுபாடு காரணமாக மனைவி சோலங்கியை கொலை செய்ய கோஸ்வாமி திட்டமிட்டுள்ளார். அதற்காக தனது நண்பன் ஈஸ்வர் என்ற நபருடன் சேர்ந்து திட்டம் தீட்டுள்ளார்.
அதன்படி, கடந்த 6ம் தேதி மாலை சோலங்கி பணி முடிந்து காரில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். ஆள்நடமாட்டமற்ற வனப்பகுதியில் சோலங்கி காரில் சென்றுகொண்டிருந்தார். அப்போது அவரது காரை இடைமறித்த கோஸ்வாமி மற்றும் ஈஸ்வர் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் சோலங்கி மீது சுட்டுள்ளனர். இதில் சோலங்கி படுகாயமடைந்தார். மேலும், சோலங்கியின் காரை வனப்பகுதியில் உள்ள மரத்தில் மோதச்செய்து விபத்து போல் சித்தரிக்க முயற்சித்துள்ளனர்.
அப்போது, அப்பகுதியில் சென்றுகொண்டிருந்தவர்கள் சோலங்கியை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.
இதையடுத்து, துப்பாக்கி சூடு நடத்திவிட்டு தப்பியோடிய கோஸ்வாமி மற்றும் அவரது நண்பன் ஈஸ்வரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இருவரையும் நேற்று போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரும் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.






