குடும்ப தகராறில் கர்ப்பிணி மனைவியை கொன்று தொழிலாளி தற்கொலை


குடும்ப தகராறில் கர்ப்பிணி மனைவியை கொன்று தொழிலாளி தற்கொலை
x

கோப்புப்படம்

கர்நாடகாவில் குடும்ப தகராறில் கர்ப்பிணி மனைவியை கழுத்தை நெரித்துகொன்று தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

மங்களூரு,

கர்நாடகா மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் பண்ட்வால் தாலுகா நாவூர் அருகே படகுந்தியை சேர்ந்தவர் தொழிலாளியான திம்மப்பா (52 வயது). இவரது மனைவி ஜெயந்தி (45 வயது). இவர்களுக்கு திருமணமாகி 15 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால், இதுவரை குழந்தைகள் ஏதும் இல்லை. தற்போது ஜெயந்தி நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார்.

இதையடுத்து அவருக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்த திம்மப்பா திட்டமிட்டார். அதன்படி அடுத்த மாதம் (ஜூலை) 2-ந் தேதி வளைகாப்பு நிகழ்ச்சி நடத்த தேதியும் முடிவு செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில், கடந்த சில நாட்களாக கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில், சம்பவத்தன்று மீண்டும் கணவன்- மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது மனைவியை திம்மப்பா சரமாரியாக தாக்கினார். மேலும், ஆத்திரம் அடங்காத அவர் மனைவியின் கழுத்தை நெரித்து உள்ளார். இதில், மூச்சுத்திணறி சம்பவ இடத்திலேயே ஜெயந்தி உயிரிழந்து விட்டார்.

இதையடுத்து சமையல் அறைக்கு சென்ற திம்மப்பா, அங்குள்ள மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த பண்ட்வால் புறநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, உயிரிழந்த இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story