தாயார் அவமதிக்கப்பட்டதாக பிரதமர் மோடி பேசியதற்கு தேஜஸ்வி யாதவ் பதிலடி

வெளிநாடு சென்ற போது சிரித்துக்கொண்டிருந்த பிரதமர் மோடி, இந்தியா திரும்பியதும் அழத்தொடங்கிவிட்டார் என்று தேஜஸ்வி யாதவ் விமர்சித்துள்ளார்.
பாட்னா,
பீகார் மாநிலத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ‘வாக்காளர் அதிகாரப் பயணத்தை’ மேற்கொண்டார். இந்தப் பயணம் நேற்றோடு (செப்டம்பர் 1 ஆம் தேதி) முடிவடைந்தது. இந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக பீகார் மாநிலத்தின் தர்பங்காவில் பேரணி நடத்தினார். அப்போது எதிர்க்கட்சித் தலைவர்கள் ராகுல் காந்தி, தேஜஸ்வி யாதவ் ஆகியோர் வருவதற்கு முன்பாக அங்கு அமைக்கப்பட்டிருந்த ஒரு மேடையில் ஏறிய சிலர், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அவரது தாயார் குறித்து இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக கூறப்படுகிறது. இதற்கு பாஜகவினர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில், ஜப்பான் மற்றும் சீன பயணத்தை முடித்துக்கொண்டு நேற்று இந்தியாவுக்கு திரும்பிய பிரதமர் நரேந்திர மோடி, பீகார் பாஜக கூட்டத்தில் காணொலி வாயிலாக பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர், “என் தாயார் அரசியலில் எதுவும் செய்யவில்லை. ஆனால் பீகாரில் ஆர்.ஜே.டி.-காங்கிரஸ் மேடையில் அவமதிப்புக்கு உள்ளானார். அவர்கள் என் அம்மாவை மட்டும் இழிவுபடுத்தவில்லை; நாட்டில் உள்ள தாய்மார்களையும் சகோதரிகளையும் இழிவுபடுத்தியுள்ளனர்” என்று பேசியுள்ளார்.பிரதமர் நரேந்திர மோடி பேசியதைக் கேட்ட பாஜகவினர் கண்கலங்கினர்.
இந்த நிலையில், பிரதமர் மோடியின் பேச்சுக்கு பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் பதிலடி கொடுத்துள்ளர். இது தொடர்பாக தேஜஸ்வி யாதவ் கூறியதாவது:“ தாயார் அவமதிக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவத்திற்குப் பிறகு வெளிநாடு சென்ற பிரதமர் மோடி சிரித்துக்கொண்டிருந்தார். ஆனால் இந்தியாவிற்கு திரும்பியதும் அவர் அழத்தொடங்கிவிட்டார்” என்று சாடியுள்ளார்.






