மும்பையில் மீண்டும் விபத்தில் சிக்கிய மோனோ ரெயில்

மோனோ ரெயில் திட்டம் மும்பையை தவிர வேறு எந்த நகரிலும் நடைமுறைக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பை,
மும்பையில் மெட்ரோ ரெயிலை போல, மோனோ ரெயில் போக்குவரத்தும் உள்ளது. இந்த ரெயில் உயர்மட்ட பாதையில் தனித்துவமான தண்டவாளத்தில் இயக்கப்படுகிறது. அதாவது மற்ற ரெயில்களை போல இரட்டை தண்டவாளங்களில் அல்லாமல் ஒற்றை தண்டவாளத்தில் இயங்கும், இந்த ரெயில் இருபுறமும் தண்டவாளத்தின் கீழ் பகுதியில் தொங்கியபடி செல்லும். கடந்த செப்டம்பர் 15 மற்றும் 19-ந் தேதிகளில் மோனோ ரெயில்கள் தொழில்நுட்ப கோளாறு காரணமாக நடுவழியில் நின்றன. மின்சாரமும் துண்டிக்கப்பட்டதால் அதன் கண்ணாடிகளை உடைத்து பயணிகள் மீட்கப்பட்டனர்.
மோனோ ரெயில் பயணிகளுக்கு ஆபத்தான பயணமாக மாறுவதாக கருதப்பட்டதை அடுத்து, அதன் சேவை கடந்த செப்டம்பர் 20-ந் தேதி முதல் நிறுத்தப்பட்டது. பராமரிப்பு மற்றும் தொழில்நுட்ப பிரச்சினைகளை சரி செய்யும் பணி நடைபெற்று வரும் நிலையில் காலை சோதனை ஓட்டம் நடந்தது. வடலா டெப்போ அருகே தண்டவாளம் கிராசிங் செய்யும் இடத்தில் சென்றபோது, மற்றொரு தண்டவாளம் மீது பயங்கரமாக மோதி நின்றது. இதில் மோனோ ரெயில் பெட்டியின் அடிப்பகுதி சுக்கு நூறாக நொறுங்கி பலத்த சேதம் அடைந்தது.
இது சோதனை ஓட்டம் என்பதால் ரெயிலில் அதிர்ஷ்டவசமாக பயணிகள் யாரும் இல்லை. ரெயில் ஓட்டுனர்கள் 2 பேரில் ஒருவர் தலையில் காயம் அடைந்தார். அவர் உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். எனினும் இது ‘சிறிய விபத்து’ என்று மோனோ ரெயில் நிர்வாகம் குறிப்பிட்டு உள்ளது.
மோனோ ரெயில் தொடர்ந்து ஆபத்துகளில் சிக்கி வருவது பயணிகள் இடையே அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. மோனோ ரெயில் திட்டம் மும்பையை தவிர வேறு எந்த நகரிலும் நடைமுறைக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.






