10-ம் வகுப்பு மாணவியை விபசார தொழிலில் தள்ளிய தாய்; மராட்டியத்தில் அதிர்ச்சி

இருவரின் தொல்லை பொறுக்க முடியாமல் ஒரு கட்டத்தில் வீட்டை விட்டு ஓடிய சிறுமி, தோழியின் வீட்டில் 3 நாட்கள் தங்கியிருக்கிறாள்.
மும்பை,
மராட்டியத்தின் மும்பை நகரை சேர்ந்த 10-ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி கத்கோபர் காவல் நிலையத்தில் அதிர்ச்சி தரும் புகார் ஒன்றை அளித்திருக்கிறார். சிறுமியின் தாயார் மற்றும் பக்கத்து வீட்டு நபர் என 2 பேரும் சேர்ந்து அந்த சிறுமியை, பணம் சம்பாதிப்பதற்காக விபசார தொழிலில் தள்ளியுள்ளனர்.
கடந்த ஏப்ரல் முதல் இந்த கொடுமை தொடர்ந்து நடந்துள்ளது. இவர்களின் தொல்லை பொறுக்க முடியாமல் ஒரு கட்டத்தில் வீட்டை விட்டு ஓடிய சிறுமி, தோழியின் வீட்டில் 3 நாட்கள் தங்கியிருக்கிறாள். இதன்பின்னர், சிறுமி வீட்டிற்கு திரும்பியபோது, அடி உதை விழுந்துள்ளது. இதன்பின்பு மீண்டும் சிறுமியை பாலியல் தொழிலில் தள்ளி இருக்கின்றனர்.
இதுபற்றி சிறுமி தோழியிடம் கூறியிருக்கிறாள். பின்னர் தைரியத்துடன் பள்ளி ஆசிரியரிடம் சிறுமி, கொடுமைகளை விவரித்து கூறியுள்ளாள். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த ஆசிரியர், பள்ளி நிர்வாகிகளிடம் விவரம் தெரிவித்து இருக்கிறார்.
அவர்கள் போலீசில் புகார் அளிக்க, 64 (கற்பழிப்பு), 98 (விபசார தொழிலில் ஈடுபடுத்தும் நோக்கில் குழந்தையை விற்றல்) மற்றும் போக்சோ சட்டத்தின் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. சிறுமியின் வயது, குற்றச்சாட்டுகளின் தீவிரம் ஆகியவற்றை கவனத்தில் கொண்டு போலீசார் உடனடியாக விசாரணையை தொடங்கி விட்டனர்.






