ஏமனில் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட கேரள நர்சை காப்பாற்ற பேச்சுவார்த்தை- கணவர் பேட்டி

நிமிஷா பிரியாவை மீட்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. அதற்காக பல்வேறு தரப்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று கூறினார்.
திருவனந்தபுரம்,
கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்தவர் நிமிஷா பிரியா. இவர் ஏமன் நாட்டில் நர்சாக வேலை பார்த்து வந்தார். அப்போது அதே நாட்டை சேர்ந்த ஒருவரை மயக்க ஊசி செலுத்தி கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து நிமிஷா பிரியாவுக்கு அந்தநாட்டு கோர்ட்டு தூக்குத்தண்டனை விதித்து உள்ளது. அந்த தீர்ப்பில் வருகிற 16-ந் தேதி தூக்கு தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது. இந்தநிலையில் நிமிஷா பிரியாவை தூக்குத்தண்டனையில் இருந்து காப்பாற்ற அவரது கணவர் டோமி தாமஸ் இறுதி கட்ட முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
இந்தநிலையில், டோமி தாமஸ் நிருபர்களிடம் கூறியதாவது:-
எனது மனைவி நிமிஷா பிரியாவை மீட்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. அதற்காக பல்வேறு தரப்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த விஷயத்தில் மத்திய, மாநில அரசுகள் மிக தீவிரம் காட்டி வருகிறது. நிமிஷாவின் தாயார் பிரேமகுமாரி, கவர்னருடன் வீடியோ கால் மூலம் பேசினார். கவர்னர் தேவையான முயற்சிகளை எடுத்து வருகிறார். அவர் மீது எங்களுக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. வருகிற 14-ந் தேதிக்குள் மத்திய அரசு அறிக்கை தாக்கல் செய்ய சுப்ரீம் கோர்ட்டு வலியுறுத்தி உள்ளது. நிமிஷா பிரியாவை மீட்க பலரும் பணம் தர முன்வந்துள்ளனர். மரணம் அடைந்தவரின் குடும்பத்தினரிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அவர்கள் ஒத்துழைத்தால், பண உதவியை பெறுவது குறித்து முடிவு எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.






