தனிமையில் இருக்கும் வீடியோக்களை சமூகவலைதளத்தில் பதிவிட்ட காதலன்; நர்சிங் மாணவி தற்கொலை முயற்சி


தனிமையில் இருக்கும் வீடியோக்களை சமூகவலைதளத்தில் பதிவிட்ட காதலன்; நர்சிங் மாணவி தற்கொலை முயற்சி
x

விஷம் குடித்த மாணவியை மீட்ட சக மாணவிகள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

புவனேஷ்வர்,

ஒடிசா மாநிலம் நபரங்பூர் மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண் ஜெய்பூர் மாவட்டத்தில் உள்ள நர்சிங் கல்லூரியில் 2ம் ஆண்டு கல்வி பயின்று வருகிறார்.

இதனிடையே, மாணவியும் அதே கல்லூரியில் படிக்கும் மாணவரும் காதலித்து வந்துள்ளனர். காதலித்தபோது இருவரும் தனிமையில் இருக்கும் புகைப்படங்கள், வீடியோக்களை மாணவன் தனது செல்போனில் சேமித்து வைத்துள்ளான்.

அதேவேளை, மாணவி வேறொரு இளைஞருடன் நெருங்கி பழகுவதாக காதலன் நினைத்துள்ளார். இது குறித்து காதலர்களுக்கு இடையே கடந்த 13ம் தேதி வாக்குவாதம் ஈடுபட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில் மாணவியை காதலன் தாக்கியுள்ளான்.

இது குறித்து மாணவி போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், இளைஞரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சிறையில் அடைக்கப்பட்ட இளைஞர் கடந்த 17ம் தேதி ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். சிறையில் இருந்து வெளியே வந்த இளைஞர், காதலி தன்னை விட்டு பிரிந்து சென்றது, போலீசில் புகார் அளித்தது போன்ற சம்பவங்களால் மிகுந்த ஆத்திரமடைந்துள்ளார்.

மேலும், தனது செல்போனில் சேமித்து வைக்கப்பட்டிருந்த காதலியுடன் தனிமையில் இருக்கும் வீடியோக்கள், புகைப்படங்களை சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோக்கள், புகைப்படங்கள் வைரலான நிலையில் இது குறித்து மாணவிக்கு தெரியவந்துள்ளது. இதனால் மன உளைச்சல் அடைந்த மாணவி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். விஷம் குடித்த மாணவியை மீட்ட சக மாணவிகள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மாணவிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், மாணவியை தற்கொலைக்கு தூண்டியதாக காதலனை போலீசார் மீண்டும் கைது செய்துள்ளனர்.

1 More update

Next Story