பேராசிரியர் மீது பாலியல் புகார்: நடவடிக்கை இல்லாததால் தீக்குளித்த மாணவி பலி

ஒடிசாவில் பாலியல் துன்புறுத்தல் புகாருக்கு முறையான நடவடிக்கை எடுக்காததால் தீக்குளித்த மாணவி பரிதாபமாக பலியானார்.
புவனேஷ்வர்,
ஒடிசா மாநிலம் பாலசோரில் உள்ள பக்கீர் மோகன் தன்னாட்சிக் கல்லூரியில் படித்துவந்த 20 வயது மாணவி ஒருவர், கல்லூரி முதல்வர் அறைக்கு வெளியே தீக்குளித்து, 90 சதவிகித தீக்காயங்களுடன் புவனேஸ்வரம் எய்ம்ஸ் மருத்துவமனையில் சனிக்கிழமை அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில், தீக்காயப் பிரிவில் நிபுணர்கள் குழுவினர் அவருக்கு சிகிச்சை அளித்து வந்தனர். இருப்பினும், சிகிச்சை பலனின்றி மாணவி நேற்று இரவு பரிதாபமாக பலியாகினார்.
தீக்குளித்தது ஏன்?
20 வயதான அந்த மாணவி, ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் இயங்கி வரும் கல்லூரி ஒன்றில் பி.எட் படித்து வந்துள்ளார். அந்த கல்லூரியின் கல்வியியல் துறை தலைவராக பணியாற்றிய சமிரா குமார் சாகு, அந்த மாணவிக்கு தொடர்ச்சியாக பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது தொடர்பாக கல்லூரியில் புகார் குழுவில் பாதிக்கப்பட்ட மாணவி புகார் கூறியுள்ளார். ஆனால் அவரது புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக கல்லூரியின் முதல்வரை கடந்த சனிக்கிழமை சந்தித்து மாணவி பேசியுள்ளார். அதன் பின்னர்தான், அந்த மாணவி கல்லூரி வளாகத்தில் தீக்குளித்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






