பாகிஸ்தான் எதிரி அல்ல, சில பிரச்சினைகளை உருவாக்குகின்றன - ஆப்கான் வெளியுறவுத்துறை மந்திரி

ஆப்கானில் பெண்கள், சிறுமிகள் கல்வி பெற்றுக்கொண்டு தான் உள்ளனர் என ஆப்கான் மந்திரி முத்தாக்கி கூறியுள்ளார்.
புதுடெல்லி,
ஆப்கானிஸ்தானில் உள்ள தெஹ்ரிக் - இ - தலீபான் பாகிஸ்தான் என்ற பயங்கரவாத அமைப்பின் தலைவர் நுார் வாலி மெஹ்சுத்தை குறி வைத்து, பாகிஸ்தான் வான்வழி தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக ஆப்கானிஸ்தான் ராணுவத்தினர் பாகிஸ்தானில் எல்லையில் பல்வேறு இடங்களில் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதலில் 58 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாகவும், கிட்டத்தட்ட 25 ராணுவ முகாம்களை கைப்பற்றிவிட்டதாகவும் ஆப்கன் அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது.
இந்தநிலையில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கன் வெளியுறவுத்துறை மந்திரி அமீர்கான் முத்தாக்கி டெல்லியில் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
ஆப்கனில் தெஹ்ரிக் இ தலீபான் இயக்கம் இல்லை. நாங்கள் காபூல் வரும் முன்னரே அவர்கள் நாட்டு பழங்குடியின மக்கள் மீது தாக்குதல் நடத்தி உள்ளனர். இதன் காரணமாக ஏராளமான மக்கள் அங்கிருந்து வெளியேறினர். அமெரிக்க ராணுவம், அந்நாடு ஆதரவு பெற்ற முன்னாள் அரசாங்கமும் அவர்களுக்கு ஆப்கன் மண்ணில் அடைக்கலம் கொடுத்து இருக்கின்றனர். இவர்கள் அனைவரும் பாகிஸ்தானில் இருந்து இடம்பெயர்ந்தவர்கள்.
பாகிஸ்தான் அமைதியை விரும்புகிறது என்றால், அவர்களால் ஏன் அதை கட்டுப்படுத்த முடியவில்லை. அவர்கள்(பாக்) எங்களை குறை கூறும் முன்னர், அவர்கள் நாட்டு பிரச்சினைகளை தீர்க்க வேண்டும். தலீபான் அரசு பெண்களுக்கான கல்வியை எதிர்க்கவில்லை. குறிப்பிட்ட சில வகைகளுக்கு மட்டுமே வரம்பு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. ஆப்கனில் பெண்கள், சிறுமிகள் கல்வி பெற்றுக்கொண்டு தான் உள்ளனர். பெண் பத்திரிகையாளர்களுக்கு அனுமதி மறுப்பு உள்நோக்கம் அல்ல. பாகிஸ்தான் தாக்குதல் நடத்திய பிறகு நாங்கள் தாக்குதலை தொடங்கினோம். பாகிஸ்தான் எதிரி அல்ல.ஆனால் சில பிரச்னைகளை உருவாக்குகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.
பயங்கரவாதிகளுக்கு புகலிடம் அளிக்கும் பாகிஸ்தான்
பாகிஸ்தானின் கைபர் பக்துன்வா, பலுசிஸ்தான் மாகாணங்களில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத மையங்கள் செயல்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ரஷியா, ஈரான் போன்ற நாடுகளில் நடந்த பயங்கரவாத தாக்குதல்கள் இந்த மையங்களில் இருந்துதான் திட்டமிடப்பட்டன. முதலில், அவர்களுக்கு புகலிடம் கொடுப்பதை பாகிஸ்தான் நிறுத்த வேண்டும். ஆப்கான் மீதான எந்தவொரு தாக்குதலுக்கும் பதிலடி கொடுக்காமல் விட மாட்டோம் என தலீபான் அரசு செய்தித்தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் கூறியுள்ளார்.






