வளர்ப்பு நாய் கடித்து உரிமையாளர் சாவு - தடுப்பூசி செலுத்தியும் இறந்த பரிதாபம்

உபேந்திரன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
எர்ணாகுளம்,
தமிழ்நாட்டை சேர்ந்தவர் உபேந்திரன் (வயது 42). இவர் எர்ணாகுளம் மாவட்டம் திருப்போணித்துரா அருகே உள்ள ஏரூர் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். அவர் ஒரு நாயை வளர்த்து வந்தார். கடந்த 2 வாரங்களுக்கு முன்பு வளர்ப்பு நாய் உபேந்திரனை கடித்தது.
இதில் படுகாயம் அடைந்த அவர் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று தடுப்பூசி போட்டுக்கொண்டார். இதையடுத்து ஒரு வாரத்துக்கு பிறகு அவரது உடல் நிலை மோசமடைந்தது. பின்னர் உபேந்திரன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அப்போது அவருக்கு ரேபிஸ் நோய் பாதிப்புக்கான அறிகுறிகள் தென்பட்டது.
மேலும் வளர்ப்பு நாய்க்கு வெறி பிடிக்க தொடங்கியதாக தெரிகிறது. இதனால் அக்கம்பக்கத்தினர் அந்த நாயை அடித்து கொன்றனர். இதைத்தொடர்ந்து உபேந்திரன் எர்ணாகுளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும், பலனின்றி அவர் இறந்தார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.






