இங்கிலாந்துக்கு பிரதமர் மோடி இன்று பயணம்; சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் இறுதியாக வாய்ப்பு?

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே பாதுகாப்பு, ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பம் போன்றவற்றிலும் ஒப்பந்தம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதுடெல்லி,
பிரதமர் மோடி இங்கிலாந்து, மாலத்தீவு ஆகிய நாடுகளுக்கு இன்று முதல் 4 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதில், பல்வேறு புதிய ஒப்பந்தங்கள் இறுதியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர் முதலில் இங்கிலாந்து நாட்டுக்கு இன்று புறப்பட்டு செல்கிறார்.
அவருடைய முதல் 2 நாள் பயணத்தின் ஒரு பகுதியாக, இங்கிலாந்து பிரதமர் கீர் ஸ்டார்மரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். மன்னர் 3-ம் சார்லசையும் சந்திக்கிறார். லண்டன் நகரருகே உள்ள பிரதமர் ஸ்டார்மரின் வீட்டில் பிரதமர் மோடிக்கு விருந்து அளிக்கப்படும்.
பிரதமர் மோடியின் இந்த பயணத்தில் இரு நாடுகள் இடையே சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் முறைப்படி இறுதி செய்யப்படும். இதுதவிர, பாதுகாப்பு, ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பம் போன்றவற்றிலும் இந்தியாவுடன் ஒப்பந்தம் ஏற்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவின் 6-வது மிக பெரிய முதலீட்டுக்கான நாடாக இங்கிலாந்து உள்ளது. இதுவரை 3,600 கோடி அமெரிக்க டாலர் முதலீடு செய்யப்பட்டு உள்ளது. இதேபோன்று இங்கிலாந்தில், 2 ஆயிரம் கோடி அமெரிக்க டாலர் அளவுக்கு இந்தியா முதலீடு செய்துள்ளது.
இங்கிலாந்து பயணம் முடிந்ததும், 25 மற்றும் 26 ஆகிய நாட்களில் தீவு நாடான மாலத்தீவுக்கு பிரதமர் மோடி பயணம் மேற்கொள்கிறார். மாலத்தீவின் சுதந்திர தின கொண்டாட்டங்களில் கலந்து கொள்கிறார். ஜனாதிபதி முகமது முய்ஜுவை சந்தித்து விரிவான பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். எண்ணற்ற, இந்திய ஆதரவு வளர்ச்சி திட்ட பணிகளையும் அவர் தொடங்கி வைக்க உள்ளார்.






