விமானங்களில் பவர் பேங்க் பயன்பாட்டுக்கு தடை


விமானங்களில் பவர் பேங்க் பயன்பாட்டுக்கு தடை
x
தினத்தந்தி 6 Jan 2026 1:01 PM IST (Updated: 6 Jan 2026 2:04 PM IST)
t-max-icont-min-icon

பல முன்னணி விமான நிறுவனங்கள் பவர் பேங்க் சாதனத்தை விமானங்களில் எடுத்துச் செல்ல தடை விதித்துள்ளன.

புதுடெல்லி,

நாம் அன்றாடம் பயன்படுத்தும் மொபைல் போன் , லேப் டாப் உள்ளிட்ட மின்னணு சாதனங்களை சார்ஜ் செய்ய பவர் பேங்க் எனப்படும் சாதனம் பயன்படுத்தப்படுகிறது. நவீன உலகில் பெரும்பாலானோர் பவர் பேங்கை பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக, வெளியூர், வெளிநாடு பயணங்கள் போகும் போது, பவர் பேங்கையும் கையோடு எடுத்துச் செல்லும் நிலை தொடர்கிறது. சமீப காலமாக விமானங்களில் எடுத்துச் செல்லப்படும் பவர் பேங்க், அதிக வெப்பம் காரணமாக தீப்பற்றி எரியும் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.

இந்தநிலையில், விமானங்களில் செல்போன் மற்றும் மின்ணனு சாதனங்களை சார்ஜ் செய்வதற்கு பவர் பேங்கை பயன்படுத்த மத்திய விமான போக்குவரத்துத் துறை தடை விதித்துள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்படுவதாவது:

பவர் பேங்க் சாதனங்களில் லித்தியம் அயன் பேட்டரி உள்ளது. இவை, கடுமையான வெப்பத்தை உருவாக்கும் திறன் கொண்டவை. மேலும், அதில் ஏதாவது குறைபாடு ஏற்பட்டால் மின்கசிவு ஏற்படவும் வாய்ப்புள்ளது. எனவே, பவர் பேங்க் சாதனத்தை பயணிகள் தங்கள் கைப்பையில் மட்டுமே வைத்திருக்க வேண்டும். பயணத்தின் போது எடுத்துச் செல்லப்படும் வேறு எந்த பைகளிலும், அதை வைக்கக் கூடாது. அவ்வாறு வைத்திருக்கும் போது, பவர் பேங்க் எளிதில் தீப்பற்றினால் கண்டுபிடிப்பது கடினம் என்பதால், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

1 More update

Next Story