தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு முதல் முறையாக பிரியங்கா காந்தி இன்று வயநாடு பயணம்

Image Courtesy : ANI
இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு முதல் முறையாக எம்.பி. ஆக வயநாடு தொகுதிக்கு பிரியங்கா காந்தி இன்று வருகை தர உள்ளார்.
திருவனந்தபுரம்,
நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி கேரள மாநிலம் வயநாடு மற்றும் உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதிகளில் போட்டியிட்டார். இந்த 2 தொகுதிகளிலும் ராகுல்காந்தி அபார வெற்றி பெற்றார். இதையடுத்து வயநாடு எம்.பி. பதவியை ராஜினாமா செய்வதாக ராகுல் காந்தி அறிவித்த நிலையில், அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.
இதன்படி கடந்த 13-ந்தேதி வயநாடு தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் வேட்பாளராக பிரியங்கா காந்தி, பா.ஜ.க. வேட்பாளராக நவ்யா அரிதாஸ், இடதுசாரி கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வேட்பாளராக சத்யன் மெகோரி களமிறங்கினர். இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த 23-ந்தேதி எண்ணப்பட்டன. இதில் வயநாடு மக்களவை தொகுதியில் 4 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் பிரியங்கா காந்தி வெற்றி பெற்றார்.
போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே மகத்தான வெற்றி பெற்ற பிரியங்கா காந்தி, கடந்த 28-ந்தேதி மக்களவையில் வயநாடு தொகுதியின் எம்.பி.யாக பதவியேற்றார். அரசியலமைப்பு புத்தகத்தை கையில் ஏந்தியவாறு பிரியங்கா காந்தி பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
இந்த நிலையில் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு முதல் முறையாக எம்.பி. ஆக வயநாடு தொகுதிக்கு பிரியங்கா காந்தி இன்று வருகை தர உள்ளார். அவருடன் ராகுல் காந்தியும் வருகிறார். அவர்கள் வயநாடு தொகுதியில் நடைபெறும் பல்வேறு பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கின்றனர். தொடர்ந்து அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரியங்கா காந்தி கலந்து கொண்டு பேச உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.






