ஒடிசாவில் மர்ம நபர்களால் தீ வைத்து கொளுத்தப்பட்ட சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு


ஒடிசாவில் மர்ம நபர்களால் தீ வைத்து கொளுத்தப்பட்ட சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
x
தினத்தந்தி 3 Aug 2025 12:55 PM IST (Updated: 3 Aug 2025 3:57 PM IST)
t-max-icont-min-icon

சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் போலீசார் இதுவரை யாரையும் கைது செய்யவில்லை.

டெல்லி,

ஒடிசா மாநிலம் பூரி மாவட்டம் பயபர் கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுமி கடந்த மாதம் 19ம் தேதி காலை தனது தோழியின் வீட்டிற்கு சென்றுவிட்டு தனது வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்தார். கிராமத்திற்கு அருகே உள்ள தோட்டப்பகுதியில் நடந்து சென்றுகொண்டிருந்தபோது சிறுமியை 3 இளைஞர்கள் இடைமறித்தனர்.

மேலும், தாங்கள் கொண்டுவந்த மண்ணெண்ணெயை சிறுமியின் மீது ஊற்றி தீ வைத்து கொளுத்தியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி, உடல் முழுவதும் தீப்பற்றியதில் அலறி துடித்துள்ளார்.

சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அங்கிருந்த கிராமத்தினர் விரைந்து வந்துள்ளனர். அதற்குள் சிறுமிக்கு தீ வைத்த 3 இளைஞர்களும் அங்கிருந்து தப்பியோடினர்.

இதையடுத்து, 70 சதவீத தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட சிறுமியை கிராமத்தினர் அங்குள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். தீக்காயங்கள் தீவிரமாக இருந்ததையடுத்து மேல்சிகிச்சைக்காக சிறுமி புவனேஷ்வரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கும் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிறுமியின் உடல்நிலை மோசமானது. இதனால், மேல்சிகிச்சைக்காக சிறுமி கடந்த மாதம் 20ம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், மர்ம நபர்களால் தீ வைத்து கொளுத்தப்பட்ட 15 வயது சிறுமி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார். சிறுமியின் உயிரிழப்பிற்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் போலீசார் இதுவரை யாரையும் கைது செய்யவில்லை. அதேவேளை, இந்த சம்பவத்தில் யாருக்கும் தொடர்பு இருப்பதாக தெரியவில்லை என்று போலீசார் தெரிவித்துள்ளனர். ஆனால், சம்பவம் நடைபெற்று 15 நாட்களுக்குமேல் ஆகியும் சிறுமியை தீ வைத்து கொளுத்திய மர்ம நபர்கள் யார் என்பதை போலீசார் இதுவரை கண்டுபிடிக்காதது கண்டனத்திற்குரியது என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளன.

1 More update

Next Story