நேஷனல் ஹெரால்டு வழக்கு: சோனியா, ராகுல் மீது டெல்லி போலீசார் புதிய எப்ஐஆர் பதிவு


நேஷனல் ஹெரால்டு வழக்கு: சோனியா, ராகுல் மீது டெல்லி  போலீசார்  புதிய எப்ஐஆர் பதிவு
x

நேஷனல் ஹெரால்டு மோசடி வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் மீது டெல்லி காவல்துறை புதிய எப்ஐஆர் பதிவு செய்துள்ளது.

புதுடெல்லி

நேஷனல் ஹெரால்டு என்ற பத்திரிகையை, ஏ.ஜே.எல்., எனப்படும் 'அசோசியேட்டட் ஜர்னல்ஸ் லிமிடெட்' நிறுவனம் நடத்தி வந்தது. நிதி நெருக்கடியில் சிக்கிய இந்த நிறுவனத்தை, 50 லட்சம் ரூபாய்க்கு, 'யங் இந்தியன்ஸ்' என்ற நிறுவனம் வாங்கியது. 'யங் இந்தியன்ஸ்' நிறுவனத்தில், காங்கிரஸ் முன்னாள் தலைவர்களான சோனியா, அவருடைய மகன் ராகுல் முக்கிய பங்குதாரர்களாக உள்ளனர்.

காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பலரும் இந்த நிறுவனத்தில் இயக்குநர்களாக உள்ளனர். ஏ.ஜே.எல்., நிறுவனத்தின் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை பறிக்கும் வகையில், இந்த பரிவர்த்தனை நடந்ததாக, பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி, 2014-ல் வழக்கு தொடர்ந்தார். இதை மாஜிஸ்திரேட் கோர்ட்டு 2021ல் ஏற்றுக் கொண்டது. இதில் நடந்துள்ள பண மோசடி தொடர்பாக, 2021ல் அமலாக்கத் துறை முறைப்படி வழக்கு பதிவு செய்து விசாரிக்கிறது. டெல்லியிலுள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இந்த வழக்கில் புதிய முதல் தகவல் அறிக்கையை டெல்லி போலீசாரின், பொருளாதார குற்றப்பிரிவு இன்று பதிவு செய்துள்ளது. அமலாக்கத் துறை அளித்த புகாரின் பேரில் இந்த எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய எப்.ஐ.ஆரில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோருடன் மேலும் ஆறு பேரின் பெயர்கள் இணைக்கப்பட்டுள்ளன.

முன்னதாக, இந்த வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகள் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்தனர். நேற்று இந்த வழக்கு சிறப்பு நீதிமன்ற நீதிபதி விஷால் கோக்னே முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது குற்றப்பத்திரிகை தாக்கலானதை கருத்தில் கொண்டு, வழக்கு தொடர்பான உத்தரவை வரும் டிசம்பர் 16-ம் தேதி பிறப்பிக்கப் போவதாக நீதிபதி விஷால் கோக்னே அறிவித்தார்.

1 More update

Next Story