சத்தீஷ்காரில் ரெயில் விபத்து; இழப்பீடு அறிவித்த ரெயில்வே

ரெயில்வே நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பில், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
பிலாஸ்பூர்,
சத்தீஷ்காரின் பிலாஸ்பூர் ரெயில் நிலையம் அருகே சரக்கு ரெயில் ஒன்று நின்று கொண்டிருந்தது. அப்போது மாலை 4 மணியளவில் மெமு ரெயில் ஒன்று அந்த வழியே வந்தது. அந்த ரெயில் நின்றிருந்த சரக்கு ரெயில் மீது மோதி விபத்திற்குள்ளானது.
இந்த ரெயில் விபத்தில் 6 பேர் பலியாகி உள்ளனர். பலர் காயமடைந்து உள்ளனர். விபத்தில் மெமு ரெயிலின் பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து தடம் புரண்டன. இதனை தொடர்ந்து, அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் ஓடி வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
காயம் அடைந்த பயணிகள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டனர். மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. விபத்துக்கான காரணம் குறித்து தெரியவரவில்லை. சரக்கு ரெயில் நிற்கும் அதே தண்டவாளத்தில் எப்படி பயணிகள் ரெயில் வர அனுமதிக்கப்பட்டது?. இது மனித தவறால் நடந்ததா? அல்லது சிக்னல் கோளாறு காரணமா? என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விபத்து காரணமாக ரெயில் சேவையிலும் பாதிப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், ரெயில்வே நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பில், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சமும், படுகாயமடைந்த நபர்களுக்கு ரூ.5 லட்சமும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சமும் இழப்பீடும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.






