இந்தியா முழுவதும் ரெயில் பாதை மின்மயமாக்கல் பணி 99 சதவீதம் நிறைவு

கோப்புப்படம்
தெற்கு ரெயில்வேயை பொறுத்தவரையில் 97.63 சதவீதம் ரெயில் பாதைகள் மின்மயமாக்கல் செய்யப்பட்டிருக்கின்றன.
புதுடெல்லி,
இந்தியாவின் ரெயில் போக்குவரத்து நீண்ட காலமாக மக்களின் போக்குவரத்து தேவைகளை பூர்த்தி செய்து வருகிறது. உலகின் 4-வது பெரிய ரெயில்வே அமைப்பாக உள்ளது. தற்போது வரை 1 லட்சத்து 26 ஆயிரத்து 366 கி.மீ. தூரம் ரெயில் பாதை கொண்டு 7,335 ரெயில் நிலையங்களை, இந்தியாவில் பல்வேறு மாநிலங்களை ஒருங்கிணைக்கிறது. பயணிகள் சேவை மட்டுமல்லாது, சரக்கு சேவைக்கும் ரெயில் போக்குவரத்து கைகொடுக்கிறது.
1950-ம் ஆண்டுக்கு முன்பு வரை டீசல் என்ஜின் ரெயில்கள்தான் முழுக்க முழுக்க கோலோச்சின. அதன்பின்னர் மின்மயமாக்கல் என்ற பேச்சு பெருமளவில் அடிபடத் தொடங்கியது. குறுகியப் பாதைகள் அனைத்தும் அகலப்பாதைகளாக மாற்றப்பட்டன.
1925-ம் ஆண்டிலேயே மின்சார ரெயில் சேவை அறிமுகப்படுத்தப்பட்டாலும், 1950-க்கு பின்னர் உலகளாவிய தொழில்நுட்ப முன்னேற்றங்களை பின்பற்றிய பிறகுதான் ரெயில் மின்பாதைகளை அமைப்பதற்கான பணி தொடங்கப்பட்டன. 1960-ம் ஆண்டில் இருந்து சற்று வேகம் எடுத்தன. ரெயில்வேயின் செயல்பாட்டு செலவுகளை குறைக்கும் நோக்கில் இந்த மின் பாதை திட்டம் மாற்றி அமைக்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து, ஒவ்வொரு ஆண்டும் மின்பாதைகளாக உருவெடுக்கத் தொடங்கின. அதற்கேற்றாற்போல், மின்சாரத்தில் இயங்கும் என்ஜின்களின் எண்ணிக்கையும் அதிகரித்தன. அதிலும் 2014-ம் ஆண்டுக்கு பிறகு மத்திய அரசின் ரெயில்வே துறை இதில் அதிக முன்னெடுப்பை கையாண்டது. அதன்படி, 2014-ம் ஆண்டு வரை 33 சதவீதம் அளவுக்கு ரெயில் பாதைகள் மின்மயமாக்கப்பட்டு இருந்த நிலையில், 2020-ம் ஆண்டில் 58.7 சதவீதம் அளவுக்கு பணிகள் நிறைவு பெற்றிருந்தன.
இந்த நிலையில் கடந்த 5 ஆண்டுகளில் மேலும் 40 சதவீத பணிகள் முடிக்கப்பட்டு, தற்போது 98.8 சதவீதம் அளவுக்கு ரெயில்கள் மின் பாதைகளில் பயணிக்கின்றன. இதனால் ரெயில்களின் வேகமும் அதிகரிக்கப்பட்டிருப்பதோடு, நவீன ரெயில்களும் வடிவமைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டிருக்கிறது.
தெற்கு ரெயில்வேயை பொறுத்தவரையில், மொத்தம் உள்ள 5,116 கி.மீ. தூரத்தில் 4,995 கி.மீ. தூரத்துக்கு அதாவது 97.63 சதவீதம் ரெயில் பாதைகள் மின்மயமாக்கல் செய்யப்பட்டிருப்பதாக ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.






